/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ. 20 கோடியில் மழைநீர் கால்வாய் கட்டும் பணி
/
ரூ. 20 கோடியில் மழைநீர் கால்வாய் கட்டும் பணி
ADDED : ஆக 24, 2024 03:52 AM
தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் ( அ.தி.மு.க) தலைமையில் நடந்தது . துணைத் தலைவர் ரமேஷ் ( அ.தி.மு.க. ) முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
வடிவேல் முருகன் (அ.தி.மு.க.,): மயானத்தில் எரிக்க சித்தானுார் ஊராட்சியில் ரூ. 500 வசூலிக்கின்றனர். மூட்டம் போடக்கூடாது என நிபந்தனை விதிக்கின்றனர். நகராட்சிக்கென ஒரு மயானம் உடனடியாக தேவை. நவீன மின் மயானத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
தலைவர்: நவீன மின் மயானம் செயல்பாட்டுக்கு கொண்டு வர கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பிணத்தை எரித்து பரிசோதனை செய்ய உள்ளோம். புதிதாக வேறு மயானம் அமைக்கவும் பரிசீலிப்போம்.
ரமேஷ் (து.த.): சுகாதார பிரிவின் செயல்பாட்டில் திருப்தி இல்லை. ஆங்காங்கே குப்பை குவியலாக உள்ளது. காலி இடங்களில் புதர் மண்டி தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாரச்சந்தையில் மழை பெய்தால் தண்ணீரில் நடக்க முடியவில்லை.
வேலுச்சாமி ( காங்.): 2 வது வார்டில் கால்வாயே இல்லை. வள்ளியப்பன் செட்டியார் ஊருணி அருகே உள்ள கால்வாய் நீர் ஊருணியில் கலக்கிறது.
அனிதா (காங்): இறகுசேரி ஊருணியில் ஏப்ரல் மாதம் முதல் கழிவுநீர் கலந்து மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.
நிரோஷா (அ.தி.மு.க.,): 16வது தொகுதி நகராட்சி பள்ளியில் மரங்கள் கட்டடத்தை சேதப்படுத்தி விபத்து ஏற்படும் ஆபத்தான நிலையில் உள்ளது. துாய்மை பணியாளர்களை வேலை செய்ய கூறினால் உபகரணங்கள் இல்லை என்கின்றனர்.
சுதா (காங்): கிருஷ்ணராஜ புரத்தில் ரோடு சேதமடைந்து மோசமாக உள்ளது. மழை பெய்தால் இரவு 12:00 மணிக்கு போனில் அழைத்து மக்கள் திட்டுகின்றனர். எம்.எல்.ஏ. , எம்.பி., நிதியில் கூட கேட்டு விட்டேன். பலனில்லை. பொது நிதியில் ரோடு போட்டு தர வேண்டும்.
தலைவர்: நகரில் 95 சதவிகிதம் ரோடு போட்டதால் மீதி 5 சதவிகிதம் ரோடுகளை போட கேட்கிறார்கள். அரசு கேட்டு கொண்டதை தொடர்ந்து ரூ. 20 கோடிக்கு கால்வாய் பணிக்கு மதிப்பீடு அனுப்பி உள்ளோம். அனுமதி வந்தவுடன் விரைவில் பணிகள் துவங்கும். அலுவலர்கள் இல்லாததால் பணிகளுக்கான டெண்டர் விடவில்லை. விரைவில் டெண்டர் விடப்படும் என்றார்.

