ADDED : ஆக 01, 2024 04:50 AM

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் சிலர் நாணல், கருவேல மரங்களுக்கு தீ வைப்பதால் அதில் கூடு கட்டியுள்ள பறவைகள் பரிதவித்து வருகின்றன.
திருப்புவனம் வைகை ஆற்றினுள் பல இடங்களில் நாணல், கருவேல மரங்கள், முட்புதர் அடர்ந்து காணப்படுகின்றன. இவற்றில் கரிச்சான் குருவி, காகம், தேன்சிட்டு உள்ளிட்ட பறவை இனங்கள் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன. கடும் கோடை வெயில் காரணமாக நாணல், கருவேல மரங்கள் காய்ந்து சருகாக மாறி வருகின்றன.
இதனை பயன்படுத்தி சிலர் நாணல்களுக்கு பகலில் தீ வைத்து வருகின்றனர். காய்ந்த நாணல்கள் மீது பற்ற வைத்த தீ அருகில் உள்ள பச்சை மரங்களுக்கும் பரவி எரிகிறது.பச்சை நாணல் எரிவதால் அடர்த்தியான புகை எழும்பி ரோட்டை மறைப்பதுடன் சுற்றுப்புற சூழலையும் பாதித்து வருகிறது. மணலூர், தட்டான்குளம் உள்ளிட்ட பல இடங்களில் வைகை ஆற்றினுள் இந்த கும்பல் தொடர்ச்சியாக தீ வைத்து வருகின்றனர்.