/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் வட்டாரத்தில் கோடை விவசாயம் தாமதம்
/
திருப்புவனம் வட்டாரத்தில் கோடை விவசாயம் தாமதம்
ADDED : ஏப் 26, 2024 12:45 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் கோடை விவசாயம் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது.
வைகை ஆற்றங்கரையில் திருப்புவனம் , திருப்பாச்சேத்தி, மடப்புரம், லாடனேந்தல், மழவராயனேந்தல், தூதை உள்ளிட்ட பகுதிகள் அமைந்திருப்பதால் ஆற்றில் நீர் வரத்து இல்லாத நிலையிலும் பம்ப்செட் வைத்திருப்பவர்கள் கோடை விவசாயம் மேற்கொள்வது வழக்கம், கோடை காலங்களில் குறுகிய கால ரகங்களை பயிரிடுவர். இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
சித்திரை பிறப்பின் போது மழை பெய்வது வழக்கம், அதிலும் இந்தாண்டு லேசான நுாறலுடன் நின்று விட்டது. போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. வயல்களில் தண்ணீர் பாய்ச்சும் போது வெயில் காரணமாக எளிதில் ஆவியாகி விடுகிறது. இதனால் பெரும்பாலான பம்ப் செட் வைத்துள்ள விவசாயிகளே நெல் நடவு பணிகளை தொடங்கவில்லை. துாதை, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில விவசாயிகள் மட்டும் நெல் நடவு பணிகளை தொடங்கியுள்ளனர்.
வேளாண் துறையினர் கூறுகையில் : தண்ணீர் தட்டுப்பாடு, வெயிலின் தாக்கம் காரணமாக கோடை விவசாயம் இந்தாண்டு வெகுவாக குறைந்து விட்டது. கோடை மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புண்டு, சித்திரை திருவிழாவிற்காக வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் திருப்புவனம் பகுதிக்கு வருவது சந்தேகம் தான், இந்தாண்டு திருப்புவனம் வட்டாரத்தில் 150 ஏக்கரில் கோடை விவசாயம் செய்துள்ளனர், என்றனர்.

