/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பிற்கு இணையதள வசதிபெற கட்டாய வசூல் ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டு
/
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பிற்கு இணையதள வசதிபெற கட்டாய வசூல் ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டு
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பிற்கு இணையதள வசதிபெற கட்டாய வசூல் ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டு
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பிற்கு இணையதள வசதிபெற கட்டாய வசூல் ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டு
ADDED : மே 11, 2024 02:33 AM
சிவகங்கை:அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பிற்கு இணையதள வசதி பெற, தலைமை ஆசிரியர்களிடம் கட்டாய வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 28,000 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் திட்டம் செயல்படுத்தி வருகின்றனர். இதற்காக கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைக்கும் பணியும் நடக்கிறது. அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இணைய தள வசதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் 100 எம்.பி.பி.எஸ்., வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து செலவுகளையும், அரசே நேரடியாக பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு வழங்கிவிடும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள், அந்தந்த மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ஸ்மார்ட் வகுப்பறைக்கு இணைய தள வசதி பெற, யாரிடமும் தலைமை ஆசிரியர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்த தகவலை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்குமாறு கூறினர். ஆனால், இந்த உத்தரவு களத்தில் பணிபுரியும் பி.எஸ்.என்.எல்., இணைப்பு தரும் ஒப்பந்ததாரர்களுக்கு தெரிவிக்கவில்லை. இதனால், அவர்கள் தொடர்ந்து இணையதள இணைப்பு கட்டணத்தை செலுத்துமாறு தலைமை ஆசிரியர்களை வற்புறுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் கூறியதாவது:
அனைத்து பள்ளிகளிலும் பி.எஸ்.என்.எல்., மூலம் இணைய தள வசதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி தெரிவித்திருந்தார். அதன்படி பள்ளிகள் தோறும் இணைய தள வசதி பெற்று வருகின்றனர். இதற்காக பள்ளிகளின் துாரத்திற்கு ஏற்ப ரூ.3000 முதல் ரூ.30,000 வரை செலவாகும் என பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கி.மீ., துாரத்திற்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு கூடுதல் தொகை செலுத்தினால் மட்டுமே இணைப்பு வழங்கப்படும் என ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்படியாவது கோடை விடுமுறைக்குள் பள்ளிகளில் இணைய தள வசதி பெற வேண்டும் என கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களை வற்புறுத்துகின்றனர். கல்வித்துறை அதிகாரிகள் எவ்வித கட்டணமும், தலைமை ஆசிரியர்கள் தர வேண்டாம் எனக்கூறினாலும், கட்டாய வசூல் செய்வதை தடுக்க தீர்வு காண வேண்டும் என்றார்.