/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் குப்பை கொட்ட இடம் இல்லை
/
திருப்புவனத்தில் குப்பை கொட்ட இடம் இல்லை
ADDED : ஜூன் 27, 2024 11:38 PM

திருப்புவனம் : திருப்புவனம் நகரில் தினசரி சேகரிக்கப்படும் குப்பையை கொட்ட போதிய இடம் இல்லாததால் வருவாய்த்துறையினரிடம் குப்பை கொட்ட இடம் ஒதுக்கி தரும்படி பேரூராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
திருப்புவனம் நகரில் இரண்டு மேஸ்திரி தலைமையில் 21 நிரந்தர பணியாளர்களும், 80 தற்காலிக பணியாளர்களும் தினசரி துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சியில் இரண்டு டிராக்டர்கள், ஒரு சரக்கு வேன், இரண்டு மினி வேன்கள் மூலம் தினசரி ஆறு டன் குப்பை வரை சேகரிக்கப்படுகின்றன.
திருமணம் மற்றும் திருவிழா காலங்களில் இது இருமடங்காக உயரும். தினசரி பேரூராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பை பாக்யாநகர் எதிரே உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரித்து அழிக்கப்பட்டன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை தரம் பிரிக்கப்படாமல் அப்படியே கொட்டப்பட்டு வந்ததால் குப்பை மலை போல குவிந்துள்ளது. குப்பை கொட்ட இடம் இல்லாததால் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி தீவைப்பதுடன் வைகை ஆற்றிலும் கொட்டி மாசுபடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குப்பை கொட்ட பேரூராட்சியில் போதிய இடம் உள்ளதா என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பிய போது பேரூராட்சி சார்பில் திருப்புவனத்தில் குப்பைகளை கொட்ட அரசு இடம் தேர்வு செய்து தருமாறு வருவாய்த்துறையிடம் கேட்டுள்ளதாகவும், வருவாய்த்துறை இடம் வழங்கிய பின் அங்கு குப்பை கொட்டப்படும் என்றும் பேரூராட்சியினர் தெரிவித்துள்ளனர்.

