/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செயல் அலுவலர் இல்லாத திருப்புவனம் பேரூராட்சி
/
செயல் அலுவலர் இல்லாத திருப்புவனம் பேரூராட்சி
ADDED : மே 18, 2024 06:04 AM

திருப்புவனம் : திருப்புவனம் பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் நியமிக்கப்படாமல் திருப்புத்துார் அலுவலரை கூடுதல் பொறுப்பாக செயல் அலுவலரை நியமித்துள்ளதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவுன்சிலர்கள் புலம்புகின்றனர்.
திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இரண்டு மேஸ்திரிகள், 100 துாய்மை பணியாளர்கள், 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மதுரை நகரை ஒட்டியுள்ள நகரம் என்பதால் புது குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் இருந்து அருப்புக்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு கூட்டுகுடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
தினசரி நகரில் துாய்மை பணி, சுகாதாரம், வீடு கட்ட அனுமதி என பணிகள் குவிந்துள்ளன.திருப்புவனத்தில் குப்பை கொட்ட போதிய இடம் இன்றி தனியார் இடத்தில் கொட்டி சமாளித்து வருகின்றனர்.எனவே குப்பை கொட்ட புதிய இடம் தேர்வு, பேரூராட்சி புதிய கட்டடம் திறப்பு என பணிகள் ஏராளமானவை உள்ளன.
திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த ஜெயராஜ் மூன்று மாதங்களுக்கு முன் இடமாறுதல் செய்யப்பட்டார். அதற்கு பின் புதிய செயல் அலுவலர் நியமிக்கப்படாமல், திருப்புத்துார் செயல் அலுவலர் தனுஷ்கோடி பொறுப்பு செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
பொறுப்பு செயல் அலுவலராக இருப்பதால் பணிகள் பாதிக்கப்படுவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தெரு விளக்கு, கூட்டு குடிநீர் திட்ட இணைப்பு உள்ளிட்டவற்றிற்கு செயல் அலுவலர் நேரில் ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும், திருப்புவனத்திற்கு செயல் அலுவலர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

