/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் இன்று ஓட்டு எண்ணிக்கை; ஏஜன்ட்கள் கால்குலேட்டருடன் வர தடை
/
காரைக்குடியில் இன்று ஓட்டு எண்ணிக்கை; ஏஜன்ட்கள் கால்குலேட்டருடன் வர தடை
காரைக்குடியில் இன்று ஓட்டு எண்ணிக்கை; ஏஜன்ட்கள் கால்குலேட்டருடன் வர தடை
காரைக்குடியில் இன்று ஓட்டு எண்ணிக்கை; ஏஜன்ட்கள் கால்குலேட்டருடன் வர தடை
ADDED : ஜூன் 04, 2024 05:35 AM
சிவகங்கை, : காரைக்குடியில் இன்று நடக்கும் ஓட்டு எண்ணும் பணியில் வேட்பாளர்களின் ஏஜன்ட்கள் கால்குலேட்டர் கொண்டு வர தடை விதித்துள்ளதால், உரிய நேரத்தில் ஓட்டு பெற்ற விபரங்களை எப்படி கணக்கிடுவது என தெரியாமல் வேட்பாளர்களின் ஏஜன்ட்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.
சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை (தனி), திருப்புத்துார், ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 வாக்காளர்கள் உள்ளனர்.
ஏப்., 19 ல் 1873 ஓட்டுச்சாவடிகளில் நடந்த ஓட்டுப்பதிவில், 10 லட்சத்து 49 ஆயிரத்து 675 பேர் ஓட்டளித்தனர்.
84 மேஜைகளில் ஓட்டு எண்ணும் பணி
காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் ஓட்டு எண்ணும் பணி இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.
முதலில் தபால் ஓட்டுக்களும், அதை தொடர்ந்து காலை 8:30 மணிக்கு மிஷினில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன. இதற்காக தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம், 6 தொகுதிக்கு 84 மேஜைகளில் ஓட்டு எண்ணும் பணி நடக்கும்.
ஒரு மேஜைக்கு வேட்பாளருக்கு தலா ஒரு ஏஜன்ட் வீதம் நியமிக்கப்படுவர். இது தவிர 14 மேஜைகளில் எண்ணப்பட்ட ஓட்டுக்கள் விபரங்களை வேட்பாளர்கள் வாரியாக பிரித்து கணக்கிட்ட பின்னர், தொகுதி வாரியான முன்னணி நிலவரங்களை சுற்றுவாரியாக அறிவிப்பார்கள்.
கால்குலேட்டருடன் வர தடை
இதற்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் கீழ் வேட்பாளருக்கு ஒரு ஏஜன்ட் வீதம் இருப்பார்கள். 14 மேஜைகளில் இருந்து வரும் ஓட்டுக்கள் விபரங்களை கணக்கிட வேட்பாளர்களின் ஏஜன்ட்களுக்கு கால்குலேட்டர் கட்டாயம் தேவை.
ஆனால், தேர்தல் கமிஷன் உத்தரவுபடி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கால்குலேட்டர் இருக்கும் என்பதால், ஏஜன்ட்கள் கொண்டுவர தடை விதித்துள்ளனர்.
இதனால், உரிய நேரத்தில் அந்தந்த கட்சி மற்றும் சுயே., வேட்பாளர் பெரும் ஓட்டுக்களை கணக்கிடுவதில் சிரமம் மற்றும் காலதாமதம் ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.
வேட்பாளரின் ஏஜன்ட்கள் கூறியதாவது: ஓட்டு எண்ணும் பணிக்கு வரும் ஏஜன்ட்கள் கொண்டுவர வேண்டிய பொருட்கள் என பென்சில், பேனா, பேட் என குறிப்பிட்டுள்ளனர். அதே நேரம் கொண்டுவரக்கூடாத பொருட்கள் பற்றிய பட்டியலை வெளியிடாமல், அவர்களாகவே கால்குலேட்டர் கொண்டுவர தடை எனக்கூறுகின்றனர்.
எண்ணும் போது சர்ச்சை வரலாம்
இதனால், அனைத்து வேட்பாளர்களின் ஏஜன்ட்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திருக்கும் கால்குலேட்டரை நம்பியே காத்திருக்க வேண்டும். இது ஓட்டு எண்ணும் இடத்தில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும், என்றனர்.
தேர்தல் அலுவலரிடம் பெறலாம்
கலெக்டர் ஆஷா அஜித் கூறியதாவது: தேர்தல் கமிஷன் உத்தரவுபடி தான் அறிவித்துள்ளோம். உதவி தேர்தல் அலுவலர் மேஜையில் கால்குலேட்டர்கள் இருக்கும். அதை வேட்பாளரின் ஏஜன்ட்களும் பயன்படுத்தி கொள்ளலாம், என்றார்.