/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைகாசி முகூர்த்த நாட்கள் துவக்கம் வாழை இலை விலை கடும் உயர்வு
/
வைகாசி முகூர்த்த நாட்கள் துவக்கம் வாழை இலை விலை கடும் உயர்வு
வைகாசி முகூர்த்த நாட்கள் துவக்கம் வாழை இலை விலை கடும் உயர்வு
வைகாசி முகூர்த்த நாட்கள் துவக்கம் வாழை இலை விலை கடும் உயர்வு
ADDED : மே 18, 2024 06:12 AM

திருப்புவனம் : வைகாசி முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதால் 200 வாழை இலைகள் கொண்ட ஒரு கட்டு ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது.
திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம், கலியாந்துார், வெள்ளக்கரை திருப்பாச்சேத்தி, கானுார், மாரநாடு, மடப்புரம், கருங்குளம், உள்ளிட்ட பகுதிகளில் வாழை பயிரிடப்படுகிறது. முகூர்த்த நாட்களை கணக்கிட்டே விவசாயிகள் வாழை பயிரிடுகின்றனர்.
சித்திரை பிறப்பிற்கு பின் முகூர்த்த நாட்கள் அதிகம் என்பதால் வாழை இலை, வாழைக்காய், வாழை மரம் உள்ளிட்டவை நல்ல விலை போகும். அறுவடைக்கு முன்பாக பக்க கன்றுகள் மூலமும் அறுவடைக்கு பின் பெரிய மரத்திலும் வாழை இலைகளை அறுவடை செய்வார்கள்.
ஏக்கருக்கு நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் ஆயிரம் இலைகள் வரை அறுவடை செய்வார்கள். கடந்த ஏப்ரல் வரை 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு இலை 300 ரூபாய் வரை விற்பனை செய்த நிலையில் தற்போது ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
பாண்டி கருப்பு, வெள்ளக்கரை : வாழையில் செலவு அதிகரித்த வண்ணம் உள்ளது. கூலி ஆட்கள் கிடைக்கவே இல்லை. 100 நாள் திட்டம் காரணமாக கூலி ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் அதிக சம்பளம் கொடுத்து ஆட்களை அழைத்து வருகிறோம்.
தற்போது வைகாசி முகூர்த்தம் என்பதால் 200 பெரிய இலைகள் கொண்ட ஒரு கட்டு ஆயிரத்து 500 முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது.சிறிய இலைகள் கொண்ட கட்டு 800 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. வைகாசி முழுவதும் இந்த விலை விற்பனையாகும் அதன்பின் விலை குறைந்து விடும், என்றார்.
பால்பாண்டி, நெல்முடிகரை : மழை இல்லாததால் கிணற்று தண்ணீரை வைத்து விவசாயம் செய்தோம், வைகாசி முகூர்த்த நாட்கள் என்பதால் விலை அதிகரித்துள்ளது. வாழை காய் வெட்டிவிட்டதால் பக்க கன்றுகள் மூலம் வாழை இலைகள் அறுவடை செய்கிறோம், கடும் வெயில் காரணமாக வாழை இலைகள் விளைச்சல் குறைந்து விட்டது. ஏக்கருக்கு இரண்டு கட்டுகள் வரை அறுவடை செய்கிறோம், என்றார்.

