/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் வைகாசி விசாக தெப்பம்
/
திருப்புத்துாரில் வைகாசி விசாக தெப்பம்
ADDED : மே 23, 2024 03:25 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக தெப்ப விழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் தீர்த்தம் வழங்குதலும், தெப்ப மண்டபத்தில் சுவாமி எழுந்தருளலும் நடந்தது.
குன்றக்குடி சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக 10ம் நாளை முன்னிட்டு நேற்று காலை 10:30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷநாதர், அஸ்திரத் தேவர் யாகசாலை கலசங்களுடன் கோயிலிலிருந்து புறப்பட்டனர். தொடர்ந்து சீதளி தெப்பக்குள படித்துறையில் எழுந்தருளினர். சிவாச்சார்யார்களால் பூஜை நடத்தி அஸ்திரத்தேவருக்கு அபிேஷக, ஆராதனை நடந்தன. பின்னர் அஸ்திரத்தேவர் சிவாச்சார்யாரால் சீதளி தடாகத்தில் தீர்த்தவாரி நடந்தது.
பின்னர் சுவாமி புறப்பாடாகி கோயிலில் யாகசாலையில் எழுந்தருளினர். அடுத்து சிவாச்சார்யார்களால் யாகசாலை பூஜை நடந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தெப்ப விழாவை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு கோயிலிலிருந்து சுவாமியும், அம்பாளும் புறப்பாடாகி சீதளி தெப்பக்குளக்கரையில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இரவு 8:30 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
பின்னர் மீண்டும் சுவாமி புறப்பட்டு கோயில் சேர்க்கை நடந்தது. தெப்பக்குளத்தில் போதிய நீர் இல்லாததால் தெப்பம் வலம் வரவில்லை. தொடர்ந்து வெள்ளிக் கேடகத்தில் சுவாமியும், அம்பாளும் திருவீதி உலா நடந்தது. தெப்ப விழாவை முன்னிட்டு யோக பைரவர் சன்னதி மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

