/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ் ஸ்டாண்ட் இல்லாத கல்லல் போராடும் கிராம மக்கள்
/
பஸ் ஸ்டாண்ட் இல்லாத கல்லல் போராடும் கிராம மக்கள்
ADDED : செப் 03, 2024 04:38 AM

சிவகங்கை : கல்லலில் பஸ் ஸ்டாண்ட் கட்டித்தர வலியுறுத்தி கிராமத்தினர் கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.
காரைக்குடி தாலுகா, கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் 44 கிராம ஊராட்சிகளின் கீழ் 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள அரசு அலுவலகம், மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவற்றிற்காக சுற்றுப்புற கிராம மக்கள் கல்லலுக்கு தான் வரவேண்டும். இது தவிர வாரந்தோறும் சந்தையும்இங்கு நடக்கிறது.
பிரசித்தி பெற்ற சோமசுந்தர சவுந்திர நாயகி அம்பாள் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் மாசி மக திருவிழாவிற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
இச்சிறப்பு பெற்ற கல்லல் நகரில் இது வரை அரசு, மக்களின் வசதிக்காக பஸ் ஸ்டாண்ட் கட்டித்தரவில்லை. தனியாரின் இடத்தில் தான் பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது.
இங்கு எந்தவித நிழற்குடை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் வெயில், மழைக்காலங்களில் பயணிகள் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கல்லல் ஒன்றிய மக்களின் வசதிக்காக, கல்லல் நகரில் அரசு தனியாக இடம் ஒதுக்கி, புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
கல்லலில் பஸ் ஸ்டாண்ட் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று கல்லல் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். கிராம தலைவர்கள் கலெக்டர் ஆஷா அஜித்தை நேரடியாக சந்தித்து, பஸ் ஸ்டாண்ட் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.