/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை லோக்சபா தொகுதியில் நாளை 1873 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை
/
சிவகங்கை லோக்சபா தொகுதியில் நாளை 1873 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை
சிவகங்கை லோக்சபா தொகுதியில் நாளை 1873 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை
சிவகங்கை லோக்சபா தொகுதியில் நாளை 1873 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை
ADDED : ஏப் 18, 2024 06:18 AM

சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதிக்குட்பட்ட 1,873 ஓட்டுச்சாவடிகளில் நாளை (ஏப்.,19) காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். இத்தேர்தலுக்கு 3746 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
சிவகங்கை லோக்சபா தொகுதி தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6:00 மணியுடன் நிறைவு பெற்றது. நாளை (ஏப்.,19) காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் உள்ளூர் எஸ்.ஐ., மற்றும் போலீசார், துணை ராணுவ படை வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
பதட்டமான 162 ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீசார் மற்றும் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது. நாளை நடக்கும் ஓட்டுப்பதிவு சதவீத விபரங்களை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தேர்தல் அதிகாரிகள் கலெக்டருக்கு வழங்குவர்.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், சிவகங்கை எஸ்.பி., டோங்க்ரே பிரவீன் உமேஷ், புதுக்கோட்டை எஸ்.பி., வந்திதா பாண்டே ஆகியோர் பாதுகாப்பு பணிகளை கண்காணிப்பர்.
1873 ஓட்டுச்சாவடிக்கு 3746 மிஷின்
இத்தொகுதியில் பா.ஜ., - காங்., - அ.தி.மு.க.,- பகுஜன் சமாஜ் - நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் என 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 'நோட்டோவுடன்' சேர்த்து 16 வேட்பாளர் பெயர் மட்டுமே பொருத்த முடியும்.
இங்கு 20 பேர் போட்டியிடுவதால் 2 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் நோட்டோவுடன் 21 வேட்பாளர் பெயர், சின்னங்கள் வெளியிடப்பட்டிருக்கும். தேர்தலன்று ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரம், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு ஓட்டுப்பதிவு உறுதி தன்மை இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும்.
1873 ஓட்டுச்சாவடிக்கு 3746 ஓட்டுப்பதிவு இயந்திரம், தலா ஒரு கட்டுப்பாடு, ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்கள் பொருத்தப்படும். இங்கு ஒரு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலரின் கீழ், 3 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், உதவியாளர்கள் இருப்பர். வேட்பாளர் சார்பில் ஏஜன்ட்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும்.
வாகனத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரம்
ஓட்டுச்சாவடிக்கு அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து நாளை மாலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுச்சாவடிக்கு எடுத்து செல்லப்படும்.
அதே போன்று ஏப்., 19 மாலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும். அந்த இயந்திரங்கள் வேட்பாளரின் ஏஜன்ட்களின் முன்னிலையில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் மூடி சீலிட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லும் வாகனங்களில் 'ஜி.பி.ஆர்.எஸ்.', கருவி பொருத்தி, கண்காணிக்கப்படும்.
ஜூன் 4 ஓட்டு எண்ணும் பணி நடப்பதால், அதுவரை ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். தினமும் கலெக்டர் ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்டு வருவார். தேர்தல் நாளன்று தொகுதி முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர், ஆயுதப்படை போலீசார், நாகலாந்து துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

