/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவில் ஒன்றிய கூட்டத்தில் வெளிநடப்பு
/
காளையார்கோவில் ஒன்றிய கூட்டத்தில் வெளிநடப்பு
ADDED : ஆக 22, 2024 02:41 AM
சிவகங்கை: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த கூட்டத்தில் ரூ.86 லட்சம் செலவின தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளிக்காத நிலையில், மின்மோட்டார் பொருத்த ரூ.58 ஆயிரம் செலவு செய்ததில் சந்தேகம் இருப்பதாக கூறி துணை தலைவர் (பா.ஜ.,) தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி (அ.தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணை தலைவர் ராஜா (பா.ஜ.,), பி.டி.ஓ.,(நிர்வாகம்) உமாராணி, பி.டி.ஓ., (ஊராட்சி) பழனியம்மாள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
l பாண்டியராஜன் (தி.மு.க.,): இந்த கூட்டத்தில் ஒரு கவுன்சிலுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான திட்டங்களை தருவதாக சொன்னீர்கள். ஆனால், இந்த முறையும் தீர்மானத்தில் நிதி ஒதுக்கீடு இல்லை. ரூ.39 லட்சத்திற்கு செலவின தீர்மானம் வைத்துள்ளீர்கள்.
l பி.டி.ஓ., உமாராணி: உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) தந்த செலவின விபரப்படி, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.பல லட்சம் பற்றாக்குறை உள்ளது. இனி வரும் காலங்களில் நிதி ஒதுக்கப்படும்.
l துணை தலைவர் ராஜா (பா.ஜ.,): அலுவலகத்திற்கு புதிய மின்மோட்டார் பொருத்த ரூ.58 ஆயிரம் செலவு செய்ததாக கூறுவது அதிகம் தான். அரசின் நிதியை வீணடிக்கிறீர்கள்.
l பி.டி.ஓ., உமாராணி: மின்மோட்டார் பழுதால் 5 நாட்களாக தண்ணீரின்றி தவித்தோம். இதற்காக ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் ஒப்புதல்படி தான் புதிய மின்மோட்டார் பொருத்தினோம்.
l தலைவர் ராஜேஸ்வரி (அ.தி.மு.க.,): ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், எந்தசெலவினம் குறித்தும் சொல்வதில்லை. தகவல் மட்டும் தான் தருகின்றனர்.
l நாகவள்ளி (தி.மு.க.,) : மறவமங்கலத்தில் அகற்றப்பட்ட தரைமட்ட குடிநீர் தொட்டியை மீண்டும் வைக்கவில்லை. அதே போன்று முக்குறுஞ்சி ஊரணி ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றவில்லை.
l பாண்டியராஜன் (தி.மு.க.,) : காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் கோபுரம் முன்பாக செல்லும் தார் ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.
l பி.கந்தசாமி (தி.மு.க.,) : காளையார்கோவில் தெப்பக்குளத்திற்கு வரும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் மழைநீர் தெப்பக்குளத்தை நிரப்பவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றி, மழை நீர் தெப்பக்குளத்தில் சேகரிக்க வேண்டும்.
l ராஜா, உதவி பொறியாளர்: தெப்பக்குளத்திற்கு மழை நீர் வரும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் பள்ளம் போட்டு விட்டனர். இதனால், மழை நீர் வரவில்லை. மீண்டும் அப்பள்ளத்தை மூடி மழை நீர் வரும் வகையில் செய்துள்ளோம். பிள்ளையார்கோவில் அருகே பாலம் கட்டிய பின் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.
l துணை தலைவர் ராஜா (பா.ஜ.,) : கடந்த தீர்மானத்தில் ரூ.86 லட்சத்தை, ஒப்புதல் இன்றி எடுத்துவிட்டனர். மேலும், பொது நிதி வரவு செலவு கணக்கை கவுன்சிலில் வைப்பதில்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது. இதையடுத்து தலைவர் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் வருகை பதிவில் கையெழுத்திடாமலும், அமர்வு படியை வாங்காமல் கூட்டத்தை புறக்கணித்தனர்.