/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழப்பசலை தடுப்பணையை தாண்டிய தண்ணீர்
/
கீழப்பசலை தடுப்பணையை தாண்டிய தண்ணீர்
ADDED : மே 18, 2024 06:16 AM

மானாமதுரை : மானாமதுரையில் புதிதாக கட்டப்பட்ட கீழப்பசலை தடுப்பணையின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதை ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் கடுமையாக இருந்தது. நீர் நிலைகளிலும் இருந்த தண்ணீரும் வற்றின. இந்நிலையில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கண்மாய்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வைகை அணையிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கடந்த சில நாட்களாக தேனி,திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கோடை மழை காரணமாக வந்த தண்ணீரும் ஆற்றில் சேர்ந்து வருகிறது.இந்த தண்ணீர் மானாமதுரை அருகே புதிதாக ரூ.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கீழப்பசலை தடுப்பணையை தாண்டி செல்கிறது.
இரு கரைகளையும் தண்ணீர் தொட்டபடி செல்லும் காட்சியை இப்பகுதி மக்கள் தினம்தோறும் சென்று பார்வையிட்டு வருகின்றனர். ஆற்றில் கூடுதலான தண்ணீர் செல்வதால் ஆற்றுக்குள் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

