/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பள்ளி வளாகத்தில் கல்வி அலுவலகம் மாற்றப்படுமா: மாணவர்களை பாதிப்பதாக ஆசிரியர்கள் புகார்
/
அரசு பள்ளி வளாகத்தில் கல்வி அலுவலகம் மாற்றப்படுமா: மாணவர்களை பாதிப்பதாக ஆசிரியர்கள் புகார்
அரசு பள்ளி வளாகத்தில் கல்வி அலுவலகம் மாற்றப்படுமா: மாணவர்களை பாதிப்பதாக ஆசிரியர்கள் புகார்
அரசு பள்ளி வளாகத்தில் கல்வி அலுவலகம் மாற்றப்படுமா: மாணவர்களை பாதிப்பதாக ஆசிரியர்கள் புகார்
ADDED : ஜூலை 04, 2024 01:23 AM
சிவகங்கை மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம்,சிவகங்கை ஒன்றிய வட்டார வள மையம், அரசு தேர்வு துறை இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்கள் அனைத்தும் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் விளையாட்டுக்கு பயன்படுத்தக் கூடிய கிரவுண்டிற்கு அருகில் தான் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு வரக்கூடிய பணியாளர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தின் நுழைவு வாயிலை பயன்படுத்தி தான் வரவேண்டும்.
நேற்று சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் கலந்தாய்வு பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் செய்தனர். ஆசிரியர் சங்கங்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் போலீசார் பள்ளிக்கூட நுழைவுவாயிலை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
50க்கும் மேற்பட்ட போலீசார் பள்ளியின் நுழைவு வாயிலில் போலீஸ் சீருடையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்.மாவட்ட கல்வித்துறை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படக்கூடிய கல்வி அலுவலகங்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு
அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி அலுவலகங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு பள்ளி வளாகங்களில் முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் பள்ளி நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுவதாக ஆசிரியர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து பள்ளி வளாகத்தில் உள்ள கல்வி அலுவலகங்களை உடனடியாக வேறு வாடகை கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். அதற்கு பொதுப்பணித் துறை அறிவுறுத்தும் வாடகையை நிர்ணயம் செய்து உரிய ஆவணத்தை ஏப்.30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலரால் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
2024- - 25ஆம் கல்வியாண்டு முதல் கல்வி அலுவலகங்கள் பள்ளி வளாகங்களில் செயல்படக் கூடாது. இதை முறையாக பின்பற்றாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.