/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
துவக்கப்படுமா திருப்புத்துாரில் தினசரி மார்க்கெட் மீண்டும்; பொதுமக்கள் அலைச்சலை அரசு தவிர்க்குமா
/
துவக்கப்படுமா திருப்புத்துாரில் தினசரி மார்க்கெட் மீண்டும்; பொதுமக்கள் அலைச்சலை அரசு தவிர்க்குமா
துவக்கப்படுமா திருப்புத்துாரில் தினசரி மார்க்கெட் மீண்டும்; பொதுமக்கள் அலைச்சலை அரசு தவிர்க்குமா
துவக்கப்படுமா திருப்புத்துாரில் தினசரி மார்க்கெட் மீண்டும்; பொதுமக்கள் அலைச்சலை அரசு தவிர்க்குமா
ADDED : ஆக 21, 2024 07:30 AM

திருப்புத்துார் : திருப்புத்துாரில் மீண்டும் தினசரி காய்கறி மார்க்கெட் வளாகம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்புத்துார் நகரில் முக்கியமான போக்குவரத்து பகுதி காந்தி , அண்ணாத்துரை சிலை பகுதி. காரைக்குடி, மதுரை ரோட்டில் நடைபாதையில் பெரும்பாலும் காய்கறி கடைகள் அமைக்கப்படுகிறது. தினசரி மார்க்கெட் இல்லாததால் பொதுமக்கள் காலையிலும், வேலை முடிந்து செல்லும் போது மாலையிலும் இங்கு காய்கறி வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்களுக்கு எளிதாக இருந்தாலும் இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குறிப்பாக நடந்து செல்பவர்களுக்கான இடத்தில் தான் இந்த வியாபாரம் நடக்கிறது. சுகாதாரமற்ற முறையில் காய்கறி விற்கப்படுவதைத் தவிர்க்க தினசரி மார்க்கெட் வளாகம் அமைக்க பொதுமக்கள் கோரி வருகின்றனர்.
திருப்புத்துார் பேரூராட்சியில் 50 ஆண்டுகளுக்கு முன் காந்தி சிலை அருகில் தினசரி மார்க்கெட் இயங்கியது. அதில் 20க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கின. ஒரே வளாகத்தில் இந்த கடைகள் இயங்கியதால் பொதுமக்கள் காய்கறி, இறைச்சி,மீன் வாங்க எளிதாக இருந்தது. அந்த இடத்தில் உணவுபொருட்களுக்கான கோடவுன் கட்டுவதற்கான திட்டம் நிறைவேற்றப்படுவதற்காக 1980 களில் மார்க்கெட் அகற்றப்பட்டது. புதிய கட்டட வளாகத்தில் மீண்டும் மார்க்கெட் வரவில்லை. பல் பொருள் வியாபாரத்திற்காக கடைகள் வாடகைக்கு விடப்பட்டது.
தற்போது நகரில் உழவர் சந்தையில் மட்டும் சில கடைகளுடன் பெயரளவிற்கு சில மணி நேரம் காய்கறி விற்பனை நடக்கிறது. மீன் கடைகள் சிவகங்கை ரோட்டோர நடைபாதையில் தற்காலிக கொட்டகைகளில் இயங்குகின்றன. இறைச்சி, காய்கறிக் கடைகள் ஆங்காங்கே வாடகைக் கடைகளிலும், பிளாட்பாரங்களிலும் இயங்குகின்றன. ஒரே இடத்தில் பொருட்கள் வாங்க மக்களால் முடிவதில்லை.
பேரூராட்சித் தலைவர் கோகிலாராணி நாராயணன் கூறுகையில், ‛ திருப்புத்துாரில் பழைய மார்க்கெட் இடத்தில் மீண்டும் தினசரி மார்க்கெட் துவக்க ஆலோசிக்கப்படுகிறது. அதற்கான நில சர்வே பணிகள் முடிந்துள்ளன. 3 அடுக்குகளில் புதிய வளாகம் 100 கடைகளுடன் அமைய திட்டமிடப்பட்டுள்ளது. இரு இடங்களில் லிப்ட் வசதி, கீழ் தளத்தில் வாகன நிறுத்தத்துடன் அமைக்க மதிப்பீடு தயாராகி வருகிறது' என்றார்.
வளர்ந்து வரும் திருப்புத்துதுார் நகரில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத பொருத்தமான இடத்தில் காய்கறி,மீன்,இறைச்சி உள்ளிட்ட கடைகள் கொண்ட தினசரி மார்க்கெட் வளாகம் அமைக்க வேண்டியது அவசியமானதாகும்.