/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்
/
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்
ADDED : செப் 26, 2025 01:59 AM
சிவகங்கை: சிவகங்கை வட்டாரத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியங்கா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சிவகங்கை வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்களான பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் தானிய பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
இதற்காக நடப்பாண்டு 199 எக்டேர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.94 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் அரை ஏக்கர் முதல் அதிக பட்சம் 5 ஏக்கர் வரையிலும் சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம். இதர விவசாயிகள் அதிகபட்சம் 12.50 ஏக்கர் வரை சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம்.
இத்திட்டத்தை செயல்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக தானியங்கி பாசன முறை அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது.
துணை நிலை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுகிறது. இதில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரமும், டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார் அமைத்திட ரூ.15 ஆயிரம் அதிகபட்ச மானியமாக வழங்கப்படும்.
இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், ரேஷன், ஆதார் நகல், நிலவரைபடம், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, தாசில்தாரிடம் பெற்ற சிறு, குறு விவசாய சான்று, மண், நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு https://tnhorticulture.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆவணங்களை வழங்கி பதிவு செய்து பயன் பெறலாம் என்றார்.