/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை அருகே 12ம் நுாற்றாண்டு கல்வெட்டு
/
சிவகங்கை அருகே 12ம் நுாற்றாண்டு கல்வெட்டு
ADDED : செப் 23, 2024 06:18 AM

சிவகங்கை, : சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் 12ஆம் நுாற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்துகளால் ஆன கல்வெட்டு கண்டறிந்துள்ளனர்.
அலவாக்கோட்டை அலவாக்கண்மாய் அருகே தோப்பு விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் முன்புள்ள துாணில் வட்டெழுத்துக்கள் பொறித்த கல்வெட்டு இருப்பதை, புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் கழக தலைவர் ராஜேந்திரன், அப்துல் கலாம் நற்பணி மன்ற உறுப்பினர் அய்யனார் கண்டறிந்தனர்.
அவர்கள் கூறியதாவது: அலவாக்கோட்டை தோப்பு விநாயகர் கோயில் கல்வெட்டில் படி எடுத்தோம். அதில், நாயத்துக்கு விளாகம் சோழ, தேவர் திருநாமத்திற்கு காணி அழகியபாண்டிய புரத்துக்களவழி என்றும், அருமொழி நாதருக்கு சசிவர்ண தேவர் கல்நாட்டி விட்ட ஆபரணநல்லூர் என்றும், விட்ட மதித்து ராய வீரபாண்டி நாட்டு சோழ மூவேந்த வேளாண் மகன் ராமமூவேந்த வேளாண் என்று பொறித்துள்ளது.
இந்த ஆபரணநல்லுாரை தோற்றுவித்தவர் சிவகங்கை சீமையின் முதல் மன்னர் சசிவர்ணத்தேவர் ஆவார். இந்த பகுதியில் விவசாயம் செழித்து இருந்துள்ளது. ஆதலால் இந்த காணியை கொடுத்து அப்பகுதி மக்களுக்கு நல்லதை செய்துள்ளார்.
இங்கு சிவன் கோவில் இருந்ததாகவும், அந்த கோவில் இருந்த இடத்தை அழகியபாண்டியநல்லுார் என்றும், ஆபரணநல்லுார் என்றும் அழைத்துள்ளனர். இங்குள்ள 2 விநாயகர் சிலைகளில் ஒன்று 7ஆம் நுாற்றாண்டையும், மற்றொன்று 10ஆம் நுாற்றாண்டையும் சேர்ந்தது.
இங்கு பலி பீடம், இடிந்த கோவில் கற்கள் உள்ளன. சோழபுரத்தில் உள்ள அம்மனுக்கு அணிவிக்கும் அணிகலன்கள், ஆபரணங்கள் செய்வதற்காக 100க்கும் மேற்பட்ட பொற்கொல்லர்கள் குடும்பத்துடன் வாழ்ந்த அடையாளம் காணப்படுகிறது.
மேலும் அவர்கள் ஆபரணங்கள், நாணயங்கள் செய்துள்ளனர். இந்த பகுதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும், என்றனர்.