/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு 21 கி.மீ. கம்பளம் விரிப்பு
/
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு 21 கி.மீ. கம்பளம் விரிப்பு
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு 21 கி.மீ. கம்பளம் விரிப்பு
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு 21 கி.மீ. கம்பளம் விரிப்பு
ADDED : பிப் 05, 2025 10:04 PM

கண்டவராயன்பட்டி; பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்க செல்லும் வழியில் 21 கி.மீ. நீளத்திற்கு கம்பளத்தை விரித்து காவடி நண்பர்கள் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார் காவடிகளுடன் ரோடுகளில் மட்டுமின்றி பராம்பரிய பாதையான வயல் வரப்பு, கண்மாய் கரை, ஒற்றையடிப்பாதைகளில் செல்கின்றனர். கால்களில் காயம் ஏற்பட்டு காவடியை கீழே இறக்க நேரிடுவதை தவிர்க்க 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்டவராயன்பட்டி குமார் என்பவர் கண்டவராயன்பட்டி கண்மாய்கரையில் 3 கி.மீ.நீளத்திற்கு சிவப்புக் கம்பளத்தை விரித்து அதில் யாத்திரை செல்ல ஏற்பாடு செய்தார்.
தற்போது சென்னை காவடி நண்பர்களின் களப்பணிக்குழு சார்பில் வெயில் அதிகமான மதிய நேரத்தில் நடப்பவர்கள் கால்களில் தண்ணீரை ஊற்றினால் காலில் கொப்பளம் ஏற்படும் என்பதால் அதைத் தவிர்க்க கம்பளம் விரிக்கத் துவங்கியுள்ளனர்.
பக்தர்கள் மதிய நேரத்தில் நடக்கும் பகுதிகளான தேவகோட்டை ரஸ்தா- ஊத்தாங்கரை வரை 3 கி.மீ. கண்டவராயன்பட்டி இரட்டைக் கண்மாய் 4 கி.மீ, பாண்டாங்குடி விலக்கு முதல் கொட்டாம்பட்டி புறவழிச்சாலை வரை 2 கி.மீ. கோபால்பட்டி கருப்பர் கோயில் -உப்பாறு வரை 6 கீ.மீ. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.இன்ஜி. கல்லூரி முதல் ரெட்டியார் சத்திரம் வரை 6 கி.மீ. துாரம் சிவப்பு மற்றும் பச்சை வண்ணக்கம்பளம் விரித்துள்ளனர்.
குழுவின் நிர்வாகி நடேசன் கூறுகையில் 23 பேர் கொண்ட குழுவினர் காவடி எடுப்பவர்களை பாதுகாப்பாக செல்ல களப்பணியாற்றுகிறோம். 21 கி.மீக்கு கம்பளத்தை முதல் நாளே விரிக்கிறோம். ஓய்வெடுக்கும் இடங்களில் குடிநீர் தருகிறோம்.
இரவில் தங்க இட வசதி இல்லாத இடங்களில் கூடாரங்கள் அமைத்துள்ளோம்' என்றனர். 425 ஆண்டு பாரம்பரிய காவடியை பாரம்பரிய பாதையில் தொடர இவர்களின் நடவடிக்கை உதவும் என்பதில் சந்தேகமில்லை.
காரைக்குடி
குன்றக்குடியில் இருந்து தைப்பூசத்தையொட்டி பழநிக்கு பாதயாத்திரையாக நேற்று நகரத்தார் மற்றும் நாட்டார் காவடிகள் புறப்பட்டது.
நகரத்தார்கள் மற்றும் நாட்டார்கள் தைப்பூசத்திற்கு காவடிகள் ஏந்தி, பழநிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். 400 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக காவடி எடுத்து வருகின்றனர். காவடிகளுடன் பாதயாத்திரையாக சென்று மீண்டும் பாதயாத்திரையாகவே திரும்புவர். இதனையொட்டி, காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் காவடிகளுடன் பாதயாத்திரையாக, குன்றக்குடிக்கு நேற்று முன்தினம் வந்தனர்.
குன்றக்குடியில் சிறப்பு பூஜைகளை முடித்து நேற்று பாதயாத்திரையை தொடங்கினர். பிப்.13 ஆம் தேதி பழநியில் காவடி செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது.
திருப்புத்துார்
பழநிக்கு காவடியுடன் பாதயாத்திரையாக 47 ஆண்டுகளாக மணச்சை பாளைய நாட்டார் செல்கின்றனர். நேற்று குன்றக்குடியில் வேல் பூஜை முடித்து பயணத்தை துவக்கினர். சண்முக சேவா சங்கத் தலைவர் துரைசிங்கம் தலைமையில் யாத்திரை துவங்கியது. 175 பேர் காவடி சுமந்து சென்றனர். திருத்தளிநாதர் கோயிலுக்கு வந்த குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு காவடிகளுக்கு தீபாராதனை நடந்தது. காரையூரில் காவடிகளுக்கு வேல்பூஜை அன்னதானம் நடந்தது.