/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டுறவு சங்கத்தில் 2.12 லட்சம் உறுப்பினர் நீக்கம்
/
கூட்டுறவு சங்கத்தில் 2.12 லட்சம் உறுப்பினர் நீக்கம்
கூட்டுறவு சங்கத்தில் 2.12 லட்சம் உறுப்பினர் நீக்கம்
கூட்டுறவு சங்கத்தில் 2.12 லட்சம் உறுப்பினர் நீக்கம்
ADDED : நவ 28, 2024 05:23 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட கூட்டுறவு கடன் சங்கங்களில் இறப்பு, தகுதி இழப்பு, சந்தா தொகை கட்டாத காரணத்தால் 2.12 லட்சம் உறுப்பினரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் கூட்டுறவு துறையின் கீழ் 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்க கிளை, 55 ஊழியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் என 211 சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களில் ரூ.100 சந்தா தொகை செலுத்தி உறுப்பினராவோர், கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிடவோ, ஓட்டளிக்கவோ தகுதி பெறுகிறார்கள். இது தவிர கடன் சங்கங்கள் மூலம் பயிர், நகை அடமான கடன் உள்ளிட்டவை பெறலாம்.
மாவட்ட அளவில் 2023 ஜூன் 1 ம் தேதிக்கு முன்பு வரை 4 லட்சத்து 83 ஆயிரத்து 797 உறுப்பினர்கள் இருந்தனர். அதற்கு பின் புதிதாக 49 ஆயிரத்து 187 உறுப்பினர்கள் சேர்த்து, 5,32,984 உறுப்பினர்களை கூட்டுறவு சங்கங்கள் வைத்திருந்தன. கூட்டுறவு சங்க தேர்தலில் ஒரு உறுப்பினர் வெவ்வேறு இடங்களில் ஓட்டளித்து விடக்கூடாது என்ற நோக்கில் ஒரு கடன் சங்கத்தில் மட்டுமே உறுப்பினராக பதிவு செய்ய முடியும். மற்ற சங்கங்களில் பதிவு செய்ய முடியாத வகையில் உறுப்பினரின் ஆதார் கார்டு, ரேஷன் ஸ்மார்ட் கார்டு இணைக்க கட்டாயப்படுத்தினர்.
இது வரை இம்மாவட்டத்தில் 2.03 லட்சம் உறுப்பினர்கள் ஆதார், ரேஷன் ஸ்மார்ட் கார்டினை அந்தந்த கூட்டுறவு கடன் சங்கங்களில் இணைத்துள்ளனர். இன்னும் 1.17 லட்சம் உறுப்பினர்களின் ஆதார், ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
2,12,812 உறுப்பினர் பெயர் நீக்கம்
ஒட்டு மொத்தமாக அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ள 5,32,984 பேரில் இறப்பு காரணமாக 69,535 பேர், கூடுதல் சந்தா தொகை கட்டி புதுப்பிக்காத 1,22,982, இதர காரணமாக 20,295 என 2,12,812 உறுப்பினர் பெயர்களை நீக்கியுள்ளனர். இதையடுத்து தற்போது கூட்டுறவு சங்கங்களில் 3,20,172 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு வரை இறப்பு காரணமாக சங்கத்திற்கு வராதவர்களின் பெயர்களும் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதென அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் கூட்டுறவு சங்க தேர்தலில் எந்தவித இடையூறின்றி நடத்த முடியும் என நம்புகின்றனர். அதே போன்று ஆதார், ஸ்மார்ட் கார்டு இணைப்பால் மற்ற கூட்டுறவு வங்கிகளில் கடன் நிலுவை இருந்தால் அதன் விபரமும் தெரியவரும் என கூறினர்.