/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதுவயலில் ரூ.22 கோடியில் புறவழிச்சாலை
/
புதுவயலில் ரூ.22 கோடியில் புறவழிச்சாலை
ADDED : பிப் 08, 2025 05:05 AM
காரைக்குடி: புதுவயலில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புறவழிச் சாலை அமைக்கும் பணி ரூ.22 கோடியில் நடைபெற உள்ளது.
புதுவயல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட 150க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் புதுவயலுக்கு தினசரி வந்து செல்கின்றனர். புதுவயல் பகுதியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு தினமும் லாரிகள் வந்து செல்கின்றன. இச்சாலை குறுகியதாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதுவயலில் புறவழிச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை இருந்தது.
தற்போது மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதுவயலில் புறவழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. சுதந்திரபுரம் தொடங்கி கண்டனுார் செக் போஸ்ட் வரை இச்சாலை அமைய உள்ளது.
இதனால் 1.5 கி.மீ., தூரம் குறைவதோடு போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்படும். தவிர, 2 ரயில்வே கேட்களில் வாகன ஓட்டிகள் காத்திருப்பதும் தவிர்க்கப்படும். நில எடுப்புக்கு ரூ. 3.50 கோடி, புதிய சாலை அமைக்க ரூ.22 கோடி என ரூ. 25.50 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
நிலம் கையகப்படுத்த கருத்து கேட்பு கூட்டம் காரைக்குடி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.
தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், நில எடுப்பு துணை ஆட்சியர் சங்கரலிங்கம், சிவகங்கை நில எடுப்பு வட்டாட்சியர் சுந்தர்ராஜன், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் பூமிநாதன் உள்ளிட்ட பலர் பணியை மேற்கொண்டுள்ளனர்.