/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி விவசாயிகளுக்கு ரூ.8 கோடி இழப்பீடு
/
கீழடி விவசாயிகளுக்கு ரூ.8 கோடி இழப்பீடு
ADDED : அக் 25, 2024 05:11 AM
கீழடி: கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு மூன்று வருடங்களுக்கு பின் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
கீழடியில் நான்கு மற்றும் ஆறாம் கட்ட அகழாய்வு நடந்த நான்கரை ஏக்கர் நிலத்தில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டு 16 விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலைக்கு மிக அருகில் விவசாய நிலங்கள் இருப்பதால் சந்தை மதிப்பை விட நான்கு மடங்கு அதிக விலை தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.ஆனால் அரசு தரப்பில் மிக குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டது.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஒரு சென்ட் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்க அரசு தரப்பில் நிர்ணயிக்கப்பட்டு 10ம் கட்ட அகழாய்வு தொடங்குவதற்கு முன் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்திருந்து.
ஆனால் 10ம் கட்ட அகழாய்வு தொடங்கி முடிவடையும் நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 விவசாயிகளின் நான்கு ஏக்கர் 48 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதில் ஒரு சென்ட் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு மொத்தம் எட்டு கோடியே 20 லட்ச ரூபாய் இழப்பீடு தொகைக்காக ஒதுக்கப்பட்டு 12 விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
மூன்று விவசாயிகளுக்கு மட்டும் வங்கி கணக்கு விபரம் காரணமாக வரவு வைக்கப்படவில்லை.
ஒரு நபரின் நிலம் மட்டும் நிர்வாக சிக்கல் காரணமாக பதிவு செய்யப்படவில்லை. விவசாயிகளுக்கு இழப்பீடுதொகை வழங்கப்பட்ட நிலையில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க 15 கோடியே 69 லட்ச ரூபாய்க்கு டெண்டர் கோரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.