/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
10ம் கட்ட அகழாய்வில் கிடைத்த சுடுமண் பானை குடியிருப்பாக இருக்க வாய்ப்பு
/
10ம் கட்ட அகழாய்வில் கிடைத்த சுடுமண் பானை குடியிருப்பாக இருக்க வாய்ப்பு
10ம் கட்ட அகழாய்வில் கிடைத்த சுடுமண் பானை குடியிருப்பாக இருக்க வாய்ப்பு
10ம் கட்ட அகழாய்வில் கிடைத்த சுடுமண் பானை குடியிருப்பாக இருக்க வாய்ப்பு
ADDED : செப் 22, 2024 01:54 AM

கீழடி:கீழடி 10ம் கட்ட அகழாய்வில் அதிகளவு சுடுமண் பானைகள் ஒரே இடத்தில் கிடைத்து வருவதால் பண்டைய காலத்தில் குடியிருப்பு பகுதியாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜூன் 18 முதல் நடந்து வருகிறது. இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டு மீன் உருவ பானை ஓடுகள், தா என்ற தமிழி எழுத்து கொண்ட பானை ஓடு, சுடுமண் குழாய், பாசி, மணிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.
கீழடி அகழாய்வில் சுடுமண் பானைகள் சிறியதும் பெரியதுமாக கிடைத்துள்ளன. ஆனால் 10ம் கட்ட அகழாய்வில் அதிகளவில் சுடுமண் பானைகள் ஒரே இடத்தில் கிடைத்து வருகின்றன. அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இப்பானைகளில் பண்டைய கால மக்கள் உணவிற்கு பயன்படுத்தும் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படுத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுவரை ஐந்து பெரிய சிவப்பு நிற பானைகள், 20க்கும் மேற்பட்ட சிறிய ரக பானைகள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே கீழடியில் கிடைத்த பானைகளை மதுரை காமராஜ் பல்கலை மரபணு பிரிவு, பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் புதுச்சேரி, புனே அகார் ஆய்வு நிறுவனம், புனே டெக்கான் காலேஜ் உள்ளிட்டவைக்கு ஆய்விற்கு அனுப்பப்பட்டன. இதில் மரபணு பிரிவில் ஆய்வு மேற்கொண்ட போது சுடுமண் பானைகளில் தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. மேலும் வாழை, இலந்தைப்பழங்கள், மஞ்சள், பூண்டு, இஞ்சி, சுரைக்காய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தியிருப்பதும் கண்டறியப்பட்டது. 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் குழாய் கிடைத்த இடத்திற்கு வெகு அருகே ஒரே குழியில் இரண்டு பானைகள் கிடைத்துள்ளன. மேற்கு பகுதியில் பெரிய பானையும் சரிந்த கூரை ஓடுகளும், கொட்டகை அமைத்தற்கான துளைகளும் கண்டறியப்பட்டன.
அடுத்தடுத்து சிறியதும், பெரியதுமான சுடுமண் பானைகள், குழாய்கள், சரிந்த கூரை ஓடுகள் வெளிவந்திருப்பதால் இந்த இடத்தில் குடியிருப்புகள் இருப்பதற்கான சான்றுகள் அதிகளவில் வெளிப்பட்டுள்ளன. 10ம் கட்ட அகழாய்வில் கிடைத்த சுடுமண் பானைகள் ஒருசிலவற்றில் கலைநயம் மிக்க வட்ட கோடுகள் மற்றும் வடிவமைப்புகள் பானைகளின் கழுத்துப்பகுதி, கீழ்ப்பகுதியில் காணப்படுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பானைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்திலும், அளவிலும் மாறுபட்டு இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கீழடி அகழாய்வில் கிடைத்த சுடுமண் பானைகளில் உள்ளவற்றை ஆய்வு செய்ததில் கிடைத்த பொருட்கள் தற்போது வெளிப்பட்டுள்ள சுடுமண் பானைகளிலும் இருக்க வாய்ப்புள்ளது. செப்டம்பருடன் பணிகள் வழக்கமாக நிறைவு பெறும், ஆனால் தாமதமாக பணிகள் தொடங்கியதால் அக்டோபர் வரை நடைபெற வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.