ADDED : ஏப் 16, 2025 07:58 AM

காரைக்குடி : சங்கராபுரம் ஊராட்சிக்கு குப்பை சேகரிக்க, புதிதாக வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பயன்பாடின்றி குப்பையோடு குப்பையாக வீணாகி வருகிறது.
சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் உள்ளது. இங்கு ஒப்பந்த மற்றும் நிரந்தர துாய்மை பணியாளர்கள் 50 க்கும் மேற்பட்டோரும், துாய்மை காவலர் 30 க்கும் மேற்பட்டோரும் வேலை செய்து வருகின்றனர்.
தூய்மைப் பணிக்கு புதிய வாகனங்கள்
தூய்மைப் பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று வாகனங்கள் மூலம் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப துாய்மை பணியாளர்களும் குப்பை சேகரிக்கும் வாகனங்களும் இல்லாததால் பல வீதிகளுக்கு குப்பை சேகரிக்க வண்டிகள் செல்வதில்லை என்ற புகார் எழுந்தது. மக்கள் ஆங்காங்கே உள்ள காலியிடங்களில் குப்பை கொட்டினர்.
தொடர்ந்து சாக்கோட்டை யூனியன் அதிகாரிகள் சங்கராபுரம் ஊராட்சிக்கு 30 புதிய குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை 2 மாதங்களுக்கு முன்பு வழங்கினர். தொடர்ந்து சங்கராபுரம் ஊராட்சி காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
சங்கராபுரம் ஊராட்சியில் புதிய பேட்டரி வாகனங்கள் கொடுக்கப்பட் ஒரு சில மாதங்களே ஆன நிலையில் 10க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதாகி, குப்பையோடு குப்பையாக கிடக்கிறது. குப்பை சேகரிக்க போதிய வாகனங்கள் இல்லாமல் துாய்மை பணியிலும் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

