/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரணையூரில் நீர்த்தேக்க தொட்டி இல்லை
/
அரணையூரில் நீர்த்தேக்க தொட்டி இல்லை
ADDED : ஜன 29, 2025 07:27 AM
இளையான்குடி : இளையான்குடி அருகே அரணையூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இல்லாத இடத்தில் கட்டாமல் அருகில் உள்ள ராஜபுளியேந்தலில் தொட்டி இருக்கும் இடத்திலேயே மீண்டும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதால் எந்த பயனும் இல்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரணையூர் ஊராட்சியில் அரணையூர்,ராஜபுளியேந்தல்,பெருமானேந்தல் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.இந்நிலையில் அரணையூரில் 160க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களின் தண்ணீர் தேவைக்காக கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அரணையூர் அய்யனார் கோயில் அருகே போர்வெல் போடப்பட்டு அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டாமல் அருகே உள்ள ராஜபுளியேந்தல் பகுதியில் கட்டி உள்ளனர். இதனால் அரணையூர் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் முறையாக கிடைக்காமலும், குழாய்கள் அடிக்கடி சேதமடைவதாலும் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அரணையூர் ஊராட்சியில் மேலும் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதுவும் ராஜபுளியேந்தல் பகுதியில் ஏற்கனவே மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ள இடத்திற்கு அருகே கட்டுவதற்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இடத்தை தேர்வு செய்துள்ளதாக அரணையூர் பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:அரணையூர் ஊராட்சியில் ராஜபுளியேந்தல் பகுதியில் மேலும் மற்றொரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு போதிய இடவசதி இல்லை என்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் அதிகாரிகள் மீண்டும் அதே இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு பூமி பூஜை போட்டுள்ளனர்.ஆனால் போர்வெல் போடப்பட்ட அரணையூர் அய்யனார் கோயில் அருகே போதுமான இட வசதி இருந்தும், அப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டு வருகிற நிலையில் அப்பகுதியில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

