/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் நடைபாதையில் செயல்படும் சந்தை
/
சிவகங்கையில் நடைபாதையில் செயல்படும் சந்தை
ADDED : டிச 12, 2025 05:38 AM
சிவகங்கை: சிவகங்கை வாரச்சந்தை வளாகத்தில் நடை பாதையில் காய்கறிகளை வைத்து விற்பனை செய்வதால் பொதுமக்கள் சென்று வரவும் காய்கறிகளை வாங்கவும் சிரமப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை தாலுகா அலுவலக ரோட்டில் உள்ள வாரச்சந்தை புதன் தோறும் செயல்படுகிறது. இந்த சந்தை ரூ.3.89 கோடி செலவில் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் புதுப்பிக்கப்பட்டு 172 காய்கறி கடைகள், 12 மீன் கடைகள்,1 காவலர் அறை,ஆண்,பெண் கழிப்பறையுடன் செயல்பட்டு வருகிறது.
சந்தைக்கு மதுரை, மானாமதுரை, திருப்புவனம், ராமநாதபுரம், தொண்டி, காரைக்குடி, தேவகோட்டை, சாலுார் உள்ளிட்ட பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் விற்பனைக்கு பொருட்களை கொண்டு வருகின்றனர்.இவர்கள் அனைவரும் அமர்ந்து காய்கறிகளை விற்பனை செய்வதற்கு சந்தை வளாகத்தில் போதிய கடைகள் கிடையாது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வியாபாரிகள் வருவதால் வளாகத்தில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியிலுள்ள நடைபாதையில் தார்ப்பாய் விரித்து காய்கறி விற்பனை நடக்கிறது.
மேலும் வாரச்சந்தைக்கு செல்லும் ரோட்டின் இருபுறமும் கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதனால் சந்தை நாட்களில் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சந்தையினுள் சென்று பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
வியாபாரிகள் கூறுகையில், இந்த சந்தையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாரந்தோறும் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருகிறோம். கடந்த காலத்தில் கட்டடம் இல்லாமல் தரையில் அமர்ந்து விற்றதால் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. இப்போது கட்டடம் கட்டப்பட்டு கடைகளாக பிரித்த பிறகு கடை கிடைத்தவர்கள் அதில் அமர்ந்து விற்பனை செய்கிறார்கள்.
இல்லாதவர்கள் வளாகத்தின் நடைபாதையிலும்,ரோட்டிலும் அமர்ந்து விற்பனை செய்கிறோம். கடந்த காலத்தில் கடை வைத்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றதால் சிறு வியாபாரிகள் போராட்டம் நடத்தி தான் இந்த இடங்களில் விற்க முடிகிறது. இதற்கும் முறையாக கட்டணம் செலுத்துகிறோம் என்றனர்.
ஒப்பந்ததாரர் தரப்பு கூறுகையில், வளாகத்தில் 172 கடைகள் தான் உள்ளது. ஆனால் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாரம்தோறும் வருகின்றனர். அருகில் உள்ள சாலுார், அரசனுார், கீழப்பூங்குடி உள்ளிட்ட பகுதியில் இருந்து கூடையில் மட்டுமே காய்கறி கொண்டுவந்து விற்கும் விவசாயிகளும் வருகின்றனர். முதலில் 172 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தோம். பின்னர் அவர்களின் சிரமத்தை உணர்ந்து முடிந்த வரை அவர்களுக்கு இருக்கிற இடத்தில் அனுமதி வழங்குகிறோம் என்றனர்.
சந்தைக்காக ரூ. 4 கோடி செலவழித்தும் வியாபாரிகள் எங்கு கடை நடத்த வேண்டும் என முறையாக நகராட்சி அதிகாரிகள் வழிகாட்டாததால் மக்கள் படும் சிரமம் தொடர்கிறது.

