/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடிப்படை தேவை நிறைவேறாத கொடிக்குளம்
/
அடிப்படை தேவை நிறைவேறாத கொடிக்குளம்
ADDED : மே 21, 2025 12:15 AM

தேவகோட்டை : கொடிக்குளம் கிராமத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி ஒன்றியத்தை சேர்ந்த கொடூர் ஊராட்சியைச் சேர்ந்தது கொடிக்குளம் கிராமம். சிவகங்கை மாவட்டத்தையும் புதுக்கோட்டை மாவட்டத்தையும் இணைக்கும் மெயின்ரோட்டில் உள்ளது இந்த கிராமம். இந்த கிராமத்தில் பல குடியிருப்பு இருந்தாலும் ஒரு சிமென்ட் ரோட்டை தவிர குடியிருப்புகளுக்கு செல்லும் ரோடு மண் ரோடு தான். மேலக்குடியிருப்புக்கு பாதி துாரம் தார் ரோடு போட்டும், பாதி ரோடு போடாமல் விடப்பட்டுள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன் போட்ட கிராவல் ரோட்டில் மண் கரைந்து ஜல்லிக் கற்கள் பெயர்ந்து நடக்க கூட முடியாத நிலையில் உள்ளது. மெயின் ரோட்டில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கட்டடம் கட்டப்படாமல் அரைகுறையாக ஆண்டு கணக்கில் கிடப்பில் நின்றது. அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில் தினமலர் செய்தி எதிரொலியால் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. அருகிலேயே ஊராட்சி அலுவலகம், ரேஷன்கடை, தகவல் மைய கட்டடங்கள் உள்ளன.
700 ரேஷன் தாரர்களுக்கான ரேஷன் கடையை சுற்றி பொருட்கள் வாங்க முடியாத நிலையில் சுகாதார கேடாக இருப்பதோடு கட்டடம் இடிந்து வருகிறது. மேலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. மின்தடை பற்றி புகார் கூறினால் மாவட்டத்தின் கடைசி பகுதியாக இருப்பதால் மறுநாள் தான் வருகின்றனர்.
மணிகண்டன் கூறியதாவது: மாவட்டத்தின் கடை கிராமமாக இருப்பதால் யாரும் கண்டு கொள்வதேயில்லை. அதிகாரிகள் வந்து பார்த்தால் சுற்றுப்புற சுகாதாரம் பேணப்படும். ரோடு, மின்சாரம், குடிநீர் வசதி பற்றி கிராமசபை கூட்டத்தில் பேசி தீர்மானம் போட்டு அனுப்பியும் ஒரு பயனும் இல்லை என்றார்.