/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தென்னை விவசாயத்தில் மீண்டும் ஆர்வம்
/
தென்னை விவசாயத்தில் மீண்டும் ஆர்வம்
ADDED : பிப் 05, 2024 11:51 PM
திருப்புவனம் : திருப்புவனத்தில் மீண்டும் தென்னை மரங்கள் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால் விவசாயம் களை கட்டியுள்ளது.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் இருந்தன. தென் மாவட்டங்களில் சோழவந்தானுக்கு அடுத்தபடியாக திருப்புவனம் வட்டாரத்தில் தான் தென்னை மரங்கள் அதிகம், இங்கிருந்து மும்பை, குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கு தேங்காய் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
நான்கு வழிச்சாலை. நகர் விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு எண்ணிக்கையும் குறைந்து வந்தது.
திருப்புவனம் பகுதியில் நெட்டை மரங்கள் தான் அதிகளவு வளர்க்கப்படும், நடவு செய்த 7வது வருடத்தில் காய்க்க தொடங்கும், ஆரம்பத்தில் ௪ மாதங்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்படும் அதன்பின் 60 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை நடைபெறும்,
ஒரே வருடத்தில் பலன் தரும் குட்டை மரங்களை விவசாயிகள் விரும்புவதில்லை. நீண்ட நாட்களுக்கு பலன் தரும் நெட்டை மரங்களையே விரும்புகின்றனர்.
கொத்தங்குளம் அழகர்சாமி கூறுகையில் : வத்தராயிருப்பில் இருந்து தென்னங்கன்று 75 ரூபாய்க்கு வாங்கி கடந்த 2015ல் வரப்பில் 20 கன்றுகள் வரை வைத்தேன். கடந்த இரு வருடங்களாக தேங்காய் அறுவடை நடக்கிறது. குட்டைமரங்கள் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் தேங்காய் விளைச்சல் தொடங்கி விடும், ஆனால் 100 சதவிகிதம் விளைச்சல் என உத்தரவாதம் கிடையாது, குறைந்த வருடங்களில் காய்ப்பு திறனும் இருக்காது, நெட்டை மரங்கள் 40 முதல் 50 வருடங்கள் வரை பலன் கொடுக்கும், என்றார்.
கண்மாய், ஊரணி நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது புதிதாக தென்னந்தோப்பு உருவாக்கப்பட்டு வருவதால் திருப்புவனம் வட்டாரத்தில் தென்னை மரங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.