/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை நகராட்சியில் வளர்ச்சி பணிகள் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டுகோள்
/
மானாமதுரை நகராட்சியில் வளர்ச்சி பணிகள் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டுகோள்
மானாமதுரை நகராட்சியில் வளர்ச்சி பணிகள் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டுகோள்
மானாமதுரை நகராட்சியில் வளர்ச்சி பணிகள் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டுகோள்
ADDED : மார் 08, 2024 12:56 PM
மானாமதுரை: மானாமதுரை நகராட்சியில் நடைபெறும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து உடனடியாக அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.
மானாமதுரை நகராட்சி கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம், கமிஷனர் ரங்கநாயகி, பொறியாளர் சீமா முன்னிலை வகித்தனர்.மேலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
காளீஸ்வரி தி.மு.க., கவுன்சிலர்: வசந்த நகர் பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டுமென 2 வருடங்களாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வெள்ளாளர் தெருவில் தினந்தோறும் குப்பை அள்ளுவது கிடையாது. நகராட்சி அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்துவது கிடையாது.
கமிஷனர் ரெங்கநாயகி: பல்வேறு அலுவலக பணிகளுக்கிடையே ஆய்வுக்கு சென்று வருகிறோம். வார்டுகளில் உள்ள குறைகள் குறித்து கடிதம் மூலமாக நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் வழங்க வேண்டும்.
நகராட்சி துணைத் தலைவர் பாலசுந்தரம்: சிறிய சிறிய குறைகளுக்கெல்லாம் அதிகாரிகளை பார்த்து கடிதம் கொடுக்கும் சூழ்நிலையில் கவுன்சிலர்கள் கொடுக்க முடியாமல் தான் குறைகளை அதிகாரிகளிடம் கூறி வருகின்றனர். ஆகவே அதிகாரிகள் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திரா அ.தி.மு.க., கவுன்சிலர்: காந்திஜி நகரில் உள்ள மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்து கீழே விழும் நிலை உள்ளது. ஆகவே இதனை மாற்ற மின்வாரியத்திடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தலைவர் மாரியப்பன் கென்னடி: மின்வாரியத்தின் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தேன்மொழி தி.மு.க., கவுன்சிலர்: 1வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களிலிருந்து தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு வரும் காலங்களில் நடவடிக்கை எடுப்பது கிடையாது.
தலைவர் மாரியப்பன் கென்னடி: கண்மாய் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளதால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சோம சதீஷ்குமார் தி.மு.க., கவுன்சிலர்: மானாமதுரை அரசகுழி மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் மயானத்தை உடனடியாக துவங்க வேண்டும்.ஆதனுார் சாலையில் உள்ள மயானத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர் மாரியப்பன் கென்னடி: உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
செல்வகுமார் தி.மு.க., கவுன்சிலர்: அந்தந்த வார்டுகளுக்குரிய சுகாதார மேஸ்திரிகளை நகராட்சி கவுன்சிலர்களிடம் அறிமுகப்படுத்தி கவுன்சிலர்களை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதார ஆய்வாளர் பாண்டிச்செல்வம்: விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

