/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழவராயனேந்தலில் கிடைத்த சூலக்கல்
/
மழவராயனேந்தலில் கிடைத்த சூலக்கல்
ADDED : நவ 25, 2024 05:01 AM

திருப்பாச்சேத்தி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மழவராயனேந்தலில் கோயில்களுக்கு நிலங்களை தானமாக வழங்கப்பட்டதை குறிப்பிடும் பண்டைய கால சூலக்கல் கண்டெடுக்கப்பட்டது.
பண்டைய காலத்தில் கோயில்களில் பூஜை உள்ளிட்ட காரியங்களுக்காக மன்னர்கள், நில சுவான்தார்கள் நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர். இந்நிலங்களின் குத்தகை மூலம் கிடைக்கும் வருவாயில் கோயிலை நிர்வகிப்பார்கள். அந்த வகையில் சிவாலயங்கள் உள்ளிட்டவற்றிற்கு நிலங்களை வழங்கும் போது அதனை குறிக்க சூலக்கல் நட்டு வைப்பார்கள். இந்த வகை சூலக்கற்கள் திருப்பாச்சேத்தியில் அடிக்கடி கண்டெடுக்கப்படுகிறது. அந்த வரிசையில் திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தலில் கிடைத்த சூலக்கல்லை தொல்லியல் ஆர்வலர்கள் அய்யப்பன், குரு, சோனைமுத்து, முருகன், சிவா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அவர்கள் கூறியதாவது: சூலக்கல்லை யாரும் வணங்கமாட்டார்கள். ஆனால் இப்பகுதி மக்கள் முனியய்யா சுவாமி என கருதி வழிபடுகின்றனர். விவசாய காலங்களில் இதற்கு முதலில் படையல் இடுவர். மூன்று அடி உயரம், மேற்பகுதியில் 1.5 அடி அகலமும், கீழே ஒரு அடி அகலமும் கொண்ட இக்கல்லில் மேற்பகுதியில் சூலம் தெளிவாகவும், கீழ்பகுதியில் சிதைந்தும் காணப்படுகிறது. சூலத்தின் கீழ்ப்பகுதியில் உடுக்கை போன்ற அமைப்பு காணப்படுகிறது. திருப்பாச்சேத்தி பகுதிகளில் தொடர்ந்து கிடைக்கும் சூலக்கல் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றனர்.