/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சகோதரி முறை பெண்ணை காதலித்த வாலிபர் கொலை
/
சகோதரி முறை பெண்ணை காதலித்த வாலிபர் கொலை
ADDED : டிச 13, 2024 03:10 AM

மானாமதுரை:சகோதரி முறை கொண்ட பெண்ணை காதலித்தவரை கொலை செய்து மானாமதுரை அருகே பாலத்தின் கீழே வீசிய மூவர் மானாமதுரை போலீசில் சரணடைந்தனர். இந்த கொலை தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கிடாத்திருக்கை கிராமத்தைச் சேர்ந்த காசிராஜன் மகன் திருக்கண்ணன் 26. இவரது துாரத்து உறவினர்கள் ராமேஸ்வரம் அருகே முத்துராமலிங்கபுரத்தில் வசித்தனர். அங்கு அடிக்கடி திருக்கண்ணன் சென்ற போது அவருக்கு சகோதரி முறை கொண்ட முத்திருளாண்டி மகள் சத்யா 22, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர்.
2 மாதங்களுக்கு முன்பு இருவரும் தலைமறைவாகினர். முத்திருளாண்டி ராமேஸ்வரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இருவரையும் கண்டுபிடித்து அவரவர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சில வாரங்களுக்கு முன் மீண்டும் இருவரும் தலைமறைவாயினர். மதுரையில் இருவரும் தங்கியிருப்பதை அறிந்து முத்திருளாண்டி, அவரது மகன் முத்துமணி மற்றும் உறவினர்கள் அங்கு சென்றனர். டிச., 10 ம் தேதி சத்யாவை தனியாக ஒரு இடத்தில் பாதுகாப்பாக தங்க வைத்து விட்டு திருக்கண்ணனை மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அரசு மதுபான கடை அருகே அடித்து கொலை செய்தனர்.
உடலை எடுத்து வந்து இரவு 8:30 மணிக்கு மானாமதுரை அருகே மேலப்பசலை மேம்பாலத்தின் கீழே கண்மாயில் வீசி விட்டு சென்றுள்ளனர்.
நேற்று காலை மானாமதுரை டி.எஸ்.பி., நிரேஷிடம் முத்திருளாண்டி, முத்துமணி, உறவினர் கருப்புச்சாமி ஆகியோர் சரணடைந்து, திருக்கண்ணனை கொலை செய்து கண்மாயில் உடலை வீசியதாக தெரிவித்துள்ளனர்.
போலீசார் அழுகிய நிலையில் கண்மாய் தண்ணீருக்குள் கிடந்த திருக்கண்ணன் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய தவம்,சீனி,ஜமால் ஆகியோரை கைது செய்து பூவலிங்கம், முருகன் மற்றும் 3 பேரை தேடி வருகின்றனர்.