/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆடி அமாவாசை: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
/
ஆடி அமாவாசை: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 24, 2025 11:58 PM

திருப்புவனம்; காசியை விட வீசம் பெரியது என அழைக்கப்படும் புண்ணிய ஸ்தலமான திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க வந்திருந்தனர்.
நேற்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே வைகை ஆற்றில் குவிந்தனர்.
போலீசார் வைகை ஆற்றிற்குள் செல்லும் பாதையில் வாகனங்களை அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் நெரிசல் இன்றி திதி, தர்ப்பணம் வழங்கி வழிபட்டனர். பக்தர்கள் குளிக்க எந்த வித வசதியும் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
மானாமதுரை: அன்னவாசல் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குறிச்சியில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் சாலைக்கிராமம் வரகுனேஸ்வரர் மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திருப்புத்துார்: திருப்புத்துார் சீதளி தெப்பக் குளக்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
தேவகோட்டை:- தேவகோட்டையில் நித்திய கல்யாணிபுரம் சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் துர்க்கை அம்மனுக்கு அபிஷேகங்களை தொடர்ந்து அலங்காரத்தில் விசேஷ பூஜைகள் நடந்தன. தி. ராம. சாமி. கோயிலில் வேலிற்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம், மகேஸ்வர பூஜைகள் நடந்தன.
பட்டுக் குருக்கள் நகர் பிருத்தியங்கிரா தேவி கோயிலில் நிகும்பல யாகம் நடைபெற்றன. அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
கள்ளிக்குடி கருப்பசுவாமி கோயிலில் விளக்கு பூஜை, பால்குடம் எடுத்து அபிஷேகம் நடந்தது.
தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள ஊருணியில் ராமபிரான் தர்ப்பணம் செய்ததாக வரலாறு.
இந்த ஊரணிக்கு ஜடாயு தீர்த்தம் என பெயர். ஜடாயு தீர்த்த குளத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர்.
காரைக்குடி: ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவிலுார் கொற்றவாளீஸ்வரர் கோயில் தெப்பத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும், காரைக்குடி நகரச் சிவன் கோயில் செக்காலை சிவன் கோயில் பகுதியில் உள்ள குளங்களிலும் தர்ப்பணம் செய்தனர்.