ADDED : ஆக 15, 2026 06:09 AM

திருப்புத்துார்: திருப்புத்துாரில் ஆலமரத்து காளியம்மன், ராஜகாளியம்மன் கோயிலில் கடைசி ஆடிவெள்ளியை முன்னிட்டு நடந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும்,அலகு குத்தியும்,அக்னிச்சட்டி ஏந்தியும்,பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இக்கோயிலில் ஆடி வெள்ளிகளில் பக்தர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஆடிப்பிறப்பான முதல் வெள்ளியில் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். நான்கு ஆடி வெள்ளிகளில் மூலவர் அம்மனுக்கு அபிேஷக,ஆராதனை நடந்தது. பக்தர்கள் கூழ் ஊற்றுதல், மஞ்சள் அரைத்தல், காப்புக்கட்டுதல் நடந்தது.
நேற்று ஐந்தாவது கடைசி வெள்ளியை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு பக்தர்கள் ராமர் மடம் மற்றும் ஆதி திருத்தளிநாதர் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக கோயில் வந்தனர். கோயில் ராஜகோபுரம் முன்பாக உள்ள பூக்குழியில் அலகு குத்தியும், கரகம் எடுத்தும்,அக்னி ஏந்தியும் பக்தர்கள் இறங்கினர்.
பத்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களால் மூலவர் அம்மனுக்கும்,பரிவாரத் தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் இருந்த அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானமும், மாலையில் நகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூச்சொரிதலும் நடந்தது.
மடப்புரத்தில் அலைமோதிய பக்தர்கள் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு ஆடி வெள்ளிக்கிழமை கூட்டம் அலைமோதுவது வழக்கம்
நேற்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மதியம் ஒரு மணி உச்சி கால பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.
ஏழு வித தீபாராதனை காட்டப்பட்ட பின் பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம் பிரசாதம் வழங்கப்பட்டது.போலீசார் கோயில் வாசல், கோயில் வளாகம் உள்ளிட்டவற்றில் பக்தர்களுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதனால் பக்தர்கள் நெரிசலின்றி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
தேவகோட்டை: தேவகோட்டை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் ஆடி வெள்ளி விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நிறைவு நாளான நேற்று பக்தர்கள் பால்குடம், வேல் காவடி எடுத்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காமாட்சி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பெண்கள் திரு விளக்கு பூஜை செய்தனர். நிறைவு நாளான நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர்.
அபிராமி அம்மன் கோயிலில் நேற்று பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர்.
நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் ,ஆதிபராசக்தி கோட்டை அம்மன் கோயில், காசுக்கடை வீதி முத்துமாரியம்மன் கோயில், சின்ன முத்து மாரியம்மன் கோவில், ராஜாஜி தெரு முத்து மாரியம்மன் கோவில் ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் உட்பட மாரியம்மன் கோயில்களில் திருவிழா ஒரு வாரம் நடைபெற்றது.
* காரைக்குடி அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, அம்மனுக்கு பக்தர்கள் தீ மிதித்தும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடி வெள்ளி கடைசி நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், மருதுபாண்டியர் நகர் அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளிட்ட பல கோயில்களிலும் கோமாதா பூஜை நடந்தது.
