ADDED : ஆக 26, 2025 03:48 AM

சிவகங்கை: வீடுகளுக்கு வழங்கப்படும் ஆவின் பால் பாக்கெட் பிரிட்ஜில் வைத்த சில மணி நேரத்திலேயே ஐஸ் கட்டியாக மாறி விடுவதால் மக்கள் அச்சம் அடைகின்றனர்.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பால் பூத்கள், தனியார் ஏஜன்ட்கள் மூலம் ஆவின் நிர்வாகம் பால் வினியோகம் செய்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் 89 ஆயிரம் லிட்டர் வரை கொள்முதல் செய்து, காரைக்குடியில் உள்ள ஆவின் பாலகத்திற்கு எடுத்து செல்கின்றனர். அங்கு பாலை பதப் படுத்தி, பாக்கெட்களில் நிரப்பி விற் பனைக்கு அனுப்புகின்றனர்.
நாள் ஒன்றுக்கு சிவகங்கை, ராமநாத புரம் மாவட்ட மக்களுக்கென 89 ஆயிரம் லிட்டர் பால் வழங்கப்படுகிறது. உணவு பொருட்களில் உற்பத்தி செய்த நாள், காலாவதியாகும் தேதி, விலை, அளவு போன்றவற்றை குறிப்பிட வேண்டும்.
ஆனால், ஆவின் நிர்வாகம் பால் பாக்கெட் தயாரித்த நாளை குறிப்பிடாமல், பயன்படுத்த வேண்டிய (ஒரு நாள் மட்டும்) நாளை மட்டுமே குறிப்பிட்டு உள்ளது. பால்பாக்கெட்டை வாங்கி, பிரிட்ஜில் ப்ரீசர் இல்லாத பகுதியில் வைத்த சில மணி நேரத்திற்குள் ஐஸ் கட்டியாக மாறி விடுவதால் வாடிக்கை யாளர்கள் அச்சமடைகின்றனர்.
ஆவின் நிர்வாக அதிகாரிகள் கூறிய தாவது:
ஆவின் பால் பாக்கெட் விற்பனைக்கு அனுப்பப்பட்ட அன்றைய தினமே பயன்படுத்தி விட வேண்டும் என்பதற்காக தான், உற்பத்தி நாளை குறிப்பிடவில்லை. அதே போன்று பால் பாக்கெட் ஐஸ் கட்டியாக மாற வாய்ப்பு இல்லை. பிரிட்ஜில் ப்ரீசர் பகுதியில் பாக்கெட்டை வைத்திருப்பார்கள் என்றனர்.

