/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மருத்துவமனையில் கிடப்பில் பிரேத பரிசோதனை அறை
/
அரசு மருத்துவமனையில் கிடப்பில் பிரேத பரிசோதனை அறை
ADDED : மார் 25, 2025 05:21 AM
மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி அரசு மருத்துவமனைகளில் கடந்த சில மாதங்களாக பிரேத பரிசோதனை செய்யாமல் சிவகங்கைக்கு அனுப்பப்படுவதால் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவதிக்குஉள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை, இளையான்குடி அரசு மருத்துவமனைகளுக்கு தினமும் சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், 20க்கு மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதமாக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பணியிடம் காலியாக உள்ளதினால் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் மானாமதுரை, இளையான்குடி அரசு மருத்துவமனைகளில் சுற்று வட்டார பகுதிகளில் இறந்தவர்களை பிரேத பரிசோதனை செய்யாமல் உடல்களை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதால், இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
மதுரை--ராமேஸ்வரம்நான்கு வழி சாலையில் அமைந்துள்ளதால் இந்த ரோட்டில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளில் சிக்கி பலர் பலியாகி வருகின்றனர். இப்பகுதியில் கொலை, தற்கொலை, ரயில்களில் அடிபட்டு இறப்பவர்களின் உடல்களை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்ற நிலையில் கடந்த 6 மாதமாக டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளதினால் இங்கும், இதேபோன்று இளையான்குடியிலும் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
மருத்துவமனைகளில் உடல்களை பாதுகாக்கும் குளிர்சாதன பெட்டியும் பழுதாகியுள்ளன. இந்த நாட்களில் இறந்தவர்களின் குடும்பத்தினர் உடல்களை பாதுகாக்க கூடுதலாக பணம் செலுத்தி தனியாரிடம் குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு வாங்கி கொடுக்கும் அவல நிலை ஏற்படுகிறது, என்றனர்.