/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்ட அனுமதி ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை
/
நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்ட அனுமதி ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை
நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்ட அனுமதி ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை
நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்ட அனுமதி ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை
ADDED : மார் 19, 2025 06:47 AM
காரைக்குடி : நீர் நிலை புறம்போக்கில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தால் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் குறை தீர் கூட்டத்தில் தெரிவித்தார்.
காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை, கல்லல், திருப்புத்துார், சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களுக்கு நடந்த குறைதீர் கூட்டத்தில் குறைவான விவசாயிகளே கலந்து கொண்டனர். விவசாயிகள் கருத்து:
விவசாயி நாகநாதன், தேவகோட்டை: முப்பையூரில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய் நீர்நிலைகளில் தொடர்ந்து வீடு கட்டி வருகின்றனர். இதனால் கண்மாய் மாசடைகிறது.
அதை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்படும் வீடுகளுக்கு குடிநீர், மின் இணைப்பு வழங்கக்கூடாது.
கலெக்டர் ஆஷா அஜித்: நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்படும்.மின் இணைப்பு வழங்கினால் அது குறித்து விசாரணை நடத்தப்படும். நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்ட ஊராட்சி செயலர்கள் அனுமதி அளித்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி சூசை மாணிக்கம், புளியால்: கண்மாய்களை மராமத்து செய்வதற்கு முன்பு, மடைகளை கணக்கெடுத்து சரி செய்ய வேண்டும். சேதமான மடைகளை சரி செய்தால் மட்டுமே விவசாயத்தை காக்க முடியும்.
கலெக்டர் ஆஷா அஜித்: மாவட்டத்தில் உள்ள கண்மாய், குளங்கள் கணக்கெடுப்பு செய்து, அனைவரும் பயன்பெறும் வகையிலான ஆன்லைன் பணி நடந்து வருகிறது. அதன் மூலம் கண்மாய், மடைகள் பணி முறையாக நடைபெறும். மேலும் தன்னார்வலர்கள் மூலம் கண்மாய், மடைகளை சீரமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மழைக்காலத்திற்கு முன்பு இப்பணி நடைபெறும்.
விவசாயி திரவியம், தேவகோட்டை: விவசாயிகளுக்கான ஆதார் அட்டை பதிவு நடந்து வருகிறது. ஒரு குரூப்பில் பதிந்துவிட்டு, அடுத்த குரூப்பில் பதியும்போது ஏற்கனவே பதிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.
கலெக்டர் ஆஷா அஜித்: மாநில அளவில் இப்பிரச்னை உள்ளது. பிரச்னை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.