ADDED : மார் 19, 2024 05:29 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் விவசாயத்தை அழிக்கும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்ததற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு கிராம கண்மாய்களிலும் 50க்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டம் கூட்டமாக குடியேறி விவசாயத்தை அழித்து வருகின்றன.
திருப்புவனம் பகுதியில் இரவு நேரத்தில் வளர்ந்த நாற்றுகளை வேருடன் பிடுங்கி போடுவது, நெல் துாவிய நாற்றங்காலை சேதப்படுத்துவது, வாழைக்கன்று, தென்னங்கன்றுகளை கடித்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்துவது என பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
திருப்புவனம் வட்டாரத்தில் மூவாயிரம் எக்டேரில் நெல் பயிரிட்டு வந்த நிலையில் தற்போது ஆயிரத்து 500 எக்டேரில் மட்டுமே அதிலும் நெல் விளைச்சலுக்கு வரும் வரை 24 மணி நேரமும் காவலுக்கு கூலி ஆட்களை நியமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.
வாழை விவசாயமும் பெருமளவு குறைந்து விட்டது. இதனையடுத்து விவசாயிகள் மார்ச் 13ம் தேதி திருப்புவனம் தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் மார்ச் 17- 18ம் தேதி முதல் திருப்புவனம் பகுதிகளில் விவசாயத்தை அழிக்கும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து குழு வரவழைக்கப்பட்டு பணிகள் தொடங்க உள்ளன.
போலீசார் மற்றும் விவசாயிகள் ஒத்துழைப்புடன் முதல் கட்டமாக திருப்புவனம் புதுார், பழையூர் பகுதிகளில் உள்ள பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்துவது தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

