/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரம் கோயிலில் கூடுதல் 'சிசிடிவி' கேமரா
/
மடப்புரம் கோயிலில் கூடுதல் 'சிசிடிவி' கேமரா
ADDED : ஜூலை 07, 2025 11:35 PM
திருப்புவனம்: திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோயிலில் கூடுதல்  இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி வெள்ளி போன்ற தினங்களில் சிறப்பு பேருந்துகளும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றன.
ஜூன் 27ம் தேதி திருமங்கலம் பக்தர் நிகிதாவின்காரில் இருந்த தங்க நகை திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து ஐகோர்ட் உத்தரவுப்படி விசாரணை நடந்து வருகிறது.
கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோயில் வளாகம், பிரகாரம், கோயில் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே 'சிசிடிவி'  கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கார் பார்க்கிங் செய்யப்படும் இடம், அன்னதான மண்டபம், பலிபீடம் உள்ளிட்ட இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் இல்லை.
அஜித்குமார் கொலை வழக்கில் கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள்  இருந்திருந்தால் ஓரளவிற்கு இச்சம்பவத்தை தடுத்துஇருக்கலாம், கோயிலில் உள்ள ஒன்பதுஉண்டியல் மூலம் இரு மாதங்களுக்கு ஒரு முறை 40 லட்சம் ரூபாய் அளவிற்கு வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால் பக்தர்களின் வசதிக்காக எதுவும் செய்வது கிடையாது.
பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட தங்குமிடம் உள்ளிட்டவைகள்  கோடி கணக்கில் செலவு செய்து கட்டப்பட்டும் பயன்பாடின்றி கிடக்கிறது.
கோயில் நிர்வாகம் கூடுதல் 'சிசிடிவி' கேமராக்களை வாங்கி பொருத்த வேண்டும், 'சிசிடிவி' கேமராவை கண்காணிக்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

