/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோவில் திருவிழா தகராறில் அ.தி.மு.க., நிர்வாகி கொலை
/
கோவில் திருவிழா தகராறில் அ.தி.மு.க., நிர்வாகி கொலை
கோவில் திருவிழா தகராறில் அ.தி.மு.க., நிர்வாகி கொலை
கோவில் திருவிழா தகராறில் அ.தி.மு.க., நிர்வாகி கொலை
ADDED : நவ 04, 2024 11:09 PM

திருப்பாச்சேத்தி; சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே நாட்டாகுடி அ.தி.மு.க., கிளை செயலர் கணேசன், 65; பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று காலை, 6:00 மணிக்கு கடையை திறக்க வந்தார். கடைக்கு பின் மறைந்திருந்த நபர், இவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
திருப்பாச்சேத்தி போலீசார் கணேசன் உடலை கைப்பற்றி நடத்திய முதற்கட்ட விசாரணையில், நாட்டாகுடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக கணேசனுக்கும், குண்டுமணி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறால் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது.
மானாமதுரை டி.எஸ்.பி., நிரேஷ், திருப்பாச்சேத்தி பொறுப்பு இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் குண்டுமணியை கைது செய்தனர். கணேசன் உடல் வைக்கப்பட்டிருந்த சிவகங்கை அரசு மருத்துவமனை முன் அ.தி.மு.க., மாவட்ட செயலர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமையில் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், மானாமதுரை ரோட்டில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குற்றவாளியை கைது செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதி அளித்ததால், மறியல் கைவிடப்பட்டது.
செந்தில்நாதன் கூறுகையில், 'கடந்த ஐந்து நாட்களில் சிவகங்கையை சுற்றிலும் மூன்று கொலைகள் நடந்துள்ளன. மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது,'' என்றார்.