ADDED : அக் 07, 2024 05:07 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நில அளவீடு பணி தாமதமாவதால் ஒருங்கிணைந்த வேளாண் அலுவலக கட்டடப் பணி தள்ளிப் போகிறது.
இப்பேரூராட்சியில் ஒன்றிய அலுவலக வளாகத்தில் பழைய கட்டடத்தில் உதவி வேளாண்மை அலுவலர் அலுவலகம், தோட்டக்கலை அலுவலகம் செயல்படுகிறது. மழைக்காலங்களில் இந்த அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுந்து ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் உரிய இடம் கிடைக்காததால் கட்டடப் பணி தள்ளிப்போனது. ஒன்றிய அலுவலக வளாகத்தில் காலி இடத்தில் வேளாண்மை அலுவலகம் கட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் கட்டுமான பணிக்கு வருவாய்த்துறையினர் இடத்தை அளவீடு செய்து தராததால் கட்டட பணி தாமதமாகி வருகிறது. ஒன்றிய அலுவலகம் கட்டும்போது தோண்டப்பட்ட கற்குவியல் இடையூறாக கொட்டப்பட்டு இருப்பதும் அளவீடு பணி தாமதமாக ஒரு காரணம்.
ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம் கட்டடம் கட்டுப்படும் பட்சத்தில் அதில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை அலுவலகம், வேளாண் பொறியியல் துறை அலுவலகம் உள்ளிட்டவை ஒரே கூரையில் இயங்கும்.
இதனால் விவசாயிகளுக்கு அலைச்சல் இல்லாமல் அனைத்து பலன்களையும் ஒரே இடத்தில் பெற முடியும். எனவே விரைந்து இடத்தை அளவீடு செய்து கட்டடம் கட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.