/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழை நீரில் மூழ்கிய நெற்பயிர் வேளாண் துறை ஆலோசனை
/
மழை நீரில் மூழ்கிய நெற்பயிர் வேளாண் துறை ஆலோசனை
ADDED : அக் 19, 2024 05:15 AM
சிவகங்கை : மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை மீட்க மேல் உரமிட வேண்டும் என சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக அனைத்து தாலுகாவிலும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக தேவகோட்டை, கண்ணங்குடி, கல்லல் வட்டாரங்களில் நெல் நடவு செய்த சில நாட்களே ஆன பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இந்த பயிர்களை மீட்க, விவசாயிகள் முதலில் வயலில் தேங்கியுள்ள நீரை வடிக்க வேண்டும். பயிர் நீரில் மூழ்கியிருந்ததால், தழை, துத்தநாக சத்து எடுப்பதில் சிரமம் இருக்கும்.
இதனால், வெளிர்மஞ்சள் அல்லது மஞ்சள் நிறத்தில் நெற்பயிர் காணப்படும். இப்பயிரில் பச்சை திரும்ப 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ துத்தநாக சல்பேட் இவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை வழியாக கைத்தெளிப்பான் மூலம் தெளித்தால், பச்சை திரும்பி ஒளிச்சேர்க்கை நடக்க வாய்ப்பு உள்ளது.
ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் இட வேண்டும். அனைத்து விரிவாக்க மையங்களில் ஜிங்க் சல்பேட் இருப்பு உள்ளது. மானியத்தில் இதை விவசாயிகள் பெறலாம். நீரில் மூழ்கியிருந்த காரணத்தால் பயிர்கள் அழுகி இருக்கும். அதற்கு ஊடு நாற்று நடவேண்டும் அல்லது நெல்குத்தில் 3 அல்லது 4 நாற்றுகள் இருந்தால் அவற்றை களைந்து ஊடு நாற்று நட வேண்டும்.
மேல் உரமாக 22 கிலோ யூரியா மற்றும் 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு மூன்றையும் கலந்து வைத்து, மறுநாள் காலை இதனுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து வயலில் துாவி விட வேண்டும். இதனால், பயிர் வளர்ச்சி நன்றாக இருக்கும், என்றார்.

