/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பொய், அவதுாறால் ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க., முயற்சி சிவகங்கையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
/
பொய், அவதுாறால் ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க., முயற்சி சிவகங்கையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
பொய், அவதுாறால் ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க., முயற்சி சிவகங்கையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
பொய், அவதுாறால் ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க., முயற்சி சிவகங்கையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ADDED : ஜன 23, 2025 01:41 AM

சிவகங்கை:''பொய், அவதுாறால் இந்த ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி முயற்சித்து வருகிறார் என சிவகங்கையில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி பேசினார்.
அவர் பேசியதாவது:
சிவகங்கை மண்ணுக்கு வரும்போது எனக்கு சிலிர்ப்பும், வீரமும் ஏற்படுகிறது. முத்துவடுகநாதர், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி வாழ்ந்த மண். தமிழரின் தொன்மையை எடுத்து கூறும் கீழடியை கொண்ட மாவட்டம். தி.மு.க., ஆட்சி ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து மக்களுக்காக செய்வதை தாங்கி கொள்ள முடியாத அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என எரிச்சலுடன் புலம்பி தவிக்கிறார். திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வெட்டி பேச்சு பேசுவதுபோல் வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சி தலைவர் உளறுகிறார். முழு ஈடுபாட்டுடன் ஆட்சி செய்து வருகிறோம். 2021 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதி அளித்ததில், 389யை செயல்படுத்தி விட்டோம். இன்னும் 116 வாக்குறுதி தான்; அதையும் விரைவில் நிறைவேற்றுவோம். இதை தெரிந்தும் தெரியாதது போல் பழனிசாமி பேசுகிறார். அவர் என்ன செய்வார் பாவம். அவர் இன்னொரு கட்சி தலைவர் வெளியிடும் அறிக்கையை அப்படியே 'காப்பி பேஸ்ட்' செய்து வெளியிடுகிறார். பிரபல பத்திரிகைகள் இணைய பக்கத்தில், அவர் காப்பி அடித்த குற்றச்சாட்டுக்களை வெளியிட்டனர். 2011-- 2016 சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில் சென்னை முதல் கன்னியாகுமரி கடலோர சாலை திட்டம் நிறைவேற்ற வில்லை. மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் டூவீலர் தந்துள்ளாரா. ரேஷன் கார்டுக்கு ஒரு அலைபேசி தந்து விட்டாரா. தென் தமிழகத்தில் 'ஏரோ பார்க்' வந்துவிட்டதா, 10 ஆடை அலங்கார பூங்கா அறிவித்தது எங்கே போச்சு. 58 வயதினருக்கு இலவச பஸ் பாஸ் வந்ததா. இலவச 'வைபை' வசதி செய்து தந்துள்ளாரா. இது போன்று வெற்று வாக்குறுதியை தந்துவிட்டு, தமிழக வளர்ச்சியை பாழாக்கியவர்கள். தவழ்ந்து தவழ்ந்து தமிழ்நாட்டை தரைமட்டத்திற்கு அனுப்பி விட்டு, பொய், அவதுாறால் நம்மை வீழ்த்த அ.தி.மு.க., பொதுசெயலாளர் முயல்கிறார். 2011 தி.மு.க., ஆட்சியில் உபரி வருமானம் உள்ள மாநிலமாக தமிழகம் இருந்தது. 2013ம் ஆண்டு முதல் தமிழகத்தை பற்றாக்குறை மாநிலமாக அ.தி.மு.க., ஆட்சியில் மாற்றினர். இந்தியாவிலேயே அதிக பற்றாக்குறை நிதி உள்ள மாநிலமாக தமிழகத்தை வீழ்த்திவிட்டனர். இப்படி இருந்த தமிழகத்தை நாங்கள் மீட்டுள்ளோம். அ.தி.மு.க., ஆட்சியில் அவர்களுக்கு இணக்கமான மத்திய அரசு இருந்தும், அவர்களிடம் எந்தவித திட்டத்தையும் கேட்டு பெறாமல், பதவி சுகத்திற்காக மத்திய அரசை பயன்படுத்தி கொண்டனர்.
தமிழகத்தின் மீது 'ஓரவஞ்சனை' பார்வை
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசு நம்மை தமிழக அரசு என்று பார்க்காமல், கொள்கை எதிரிகளாக பார்த்து திட்டத்தை முடக்கியது. மத்திய அரசின் இந்த ஓரவஞ்சனையை மீறித்தான் தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து வருகிறோம். மத்திய அரசின் திட்டங்களுக்கும், மாநில அரசின் நிதியை தான் செலவிடுகிறோம். அ.தி.மு.க., ஆட்சியில் நிர்வாக சீர்கேடு ஒரு புறமும், மத்திய அரசின் பாராமுகம் ஒருபுறமும் பார்த்து, தமிழகத்தை மத்திய அரசு எவ்வாறு ஒதுக்கிவிட்டது என்பதை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை மூலம் தெரிவித்துவிட்டார். இதை எதிர்கட்சி தலைவர் பழனிசாமி காதில் வாங்காமல், தமிழகம் திவாலாகி விட்டது என அறைகூவல் விடுகிறார். அவரை பொறுத்தவரை தமிழ்நாடு திவாலாக வேண்டுமா. மேலும் அரசு வீண் செலவு செய்வதாக கூறுகிறார். மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம் வீண் செலவு என சொல்ல வருகிறாரா. மக்களுக்கு எந்த செலவு செய்தால் நல்லது என்பது எங்களுக்கு தெரியும். அ.தி.மு.க.,வின் நிர்வாக திறனற்ற செயலை மக்கள் மறந்துவிடவில்லை. தி.மு.க., ஆட்சியில் இருக்க இன்னும் 13 அமாவாசை தான் இருக்கிறது என காலண்டரை பழனிசாமி கிழித்து கொண்டு வருகிறார். அவர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு அமாவாசையை எண்ணிக்கொண்டு இருக்கிறார். ஆனால் நாங்கள் மக்களுக்கான திட்டங்களை எண்ணிக்கொண்டு செயல்படுத்தி வருகிறோம். ஒவ்வொருவர் வீட்டிற்கும் தி.மு.க., அரசின் திட்டங்கள் சென்று கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.