
திருப்புவனம் : காசியை விட வீசம் பெரியது என போற்றப்படும் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் வைகை ஆற்றினுள் கூடினர். கடந்த சில நாட்களாக வைகை ஆற்றில் மழை நீர் சென்றதால் கரையோரத்தில் ஓலை கொட்டகை அமைத்து பக்தர்களுக்கு திதியும், வைகை ஆற்றின் உள்ளே தர்ப்பணம் செய்தனர். சூர்ய பகவானை நோக்கி திதி, தர்ப்பணம் வழங்கிய பின் பக்தர்கள் புஷ்பவனேஷ்வரர், சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் தரிசனம் செய்து சென்றனர். இதற்காக நான்கு ரதவீதிகளில் கனரக வாகனங்களை போலீசார் அனுமதிக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மானாமதுரை மானாமதுரை வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஆனந்தவல்லி சமேத சோமநாதர் கோயிலில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இளையான்குடி அருகே குறிச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் தர்ப்பணம் கொடுத்து, சிவனை வழிபட்டனர்.
திருப்புத்துார் சீதளிகுளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இங்குள்ள குளத்தின் நடுவில் சிவலிங்கம், சக்கரத்தாழ்வார், நந்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளனர். இக்குளம் கங்கைக்கு ஒரு படி மேல் என்ற புகழ் உண்டு. மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று இங்கு முன்னோர் களுக்கு தர்ப்பணம் வழங்கினர்.