/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பராமரிப்பு இல்லாத பாண்டியர் காலத்து தெப்பக்குளம்
/
பராமரிப்பு இல்லாத பாண்டியர் காலத்து தெப்பக்குளம்
ADDED : ஆக 14, 2025 02:37 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் பாண்டியர் காலத்து புராதன தெப்பக்குளம் பராமரிப்பு இல்லாமல் தண்ணீர் வரத்து இல்லாமல் கிடக்கிறது.
பாரி ஆண்ட பறம்பு மலை என அழைக்கப்படுவதும் பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் ஐந்தாவது சிறப்புக்குரியதுமான பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் முன்பாக பழமையான தெப்பக்குளம் உள்ளது. பாண்டிய காலத்தில் கட்டப்பட்டதற்கு ஆதாரமாக குளத்தைச் சுற்றிலும் மீன்சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்று படித்துறை உள்ள நிலையில் வடக்கு படித்துறையில் பழமையான விநாயகர், முருகன் சிலைகள் உள்ளன.
கோயில் வழிபாட்டிற்கு இக்குளத்தின் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த ஊரணிக்கு மலையில் இருந்து ஓடிவரும் மழை நீர் பிடாரியம்மன் ஊரணியில் விழுந்து அங்கிருந்து மறுகால் மூலம் இந்த ஊரணிக்கு வரும் வகையில் கட்டமைப்பு இருந்தது.
ஆனால் பல இடங்களில் கால்வாய்கள் சிதிலமடைந்ததால் ஊரணிக்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. இதனால் பெரிய மழை பெய்தாலும் கூட இந்த ஊரணி நிரம்ப தாமதமாகிறது. கடந்த வாரம் இப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் தொடர்ச்சியாக பெய்து ஒரு மழையின் போது கூட இந்த ஊரணிக்கு தண்ணீர் முறையாக வந்து சேரவில்லை.
இதற்கிடையில் இந்த ஊரணி அருகேயும், கோயில் அலங்கார வளைவு அருகே இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் கோயிலின் புனிதம் பாதிக்கப்படுகிறது. எனவே ஊரணியை மராமத்து செய்து தண்ணீர் நிரம்புவதற்கு வழி செய்ய வேண்டும்.