/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதியவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
/
முதியவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
ADDED : ஆக 05, 2025 05:24 AM
சிவகங்கை : தேவகோட்டை அருகே முதியவர் கருப்பையா 60, கொலை வழக்கில் நேற்று முன்தினம் இருவர் போலீசில் சரணடைந்த நிலையில் மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சிவகங்கை அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி பிரவீன் குமார் 27. ஏப்.27 மதியம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த கருப்பையா மகன் விக்கி என்ற கருணா கரன் 20, சிவகங்கை காளவாசல் பிரபாகரன் 19, திருப்புத்துார் அருகே நரசிங்கபுரம் குரு 21, செய்களத்துார் முகேஷ் 21, கொலைக்கு ஆயுதங்கள் கொடுத்த 14 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சாமியார்பட்டியிலிருந்து வெளியேறிய விக்கி யின் தந்தை கருப்பையா 60 தனது மனைவி விமலாவுடன் திருவேகம்புத்துார் அருகே விளாங் காட்டூரில் வசித்து வந்தார். ஆட்டுக்கிடையில் இருந்த கருப்பையாவை ஆக.2., ல் 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
கருப்பையா மனைவி விமலா 42, திருவேகம்புத்துார் போலீசில் சாமியார்பட்டியை சேர்ந்த பாக்கியம் மகன் இளையராஜா உள்ளிட்ட 3 பேர் மீது புகார் அளித்தார். இளையராஜா 41, தங்கராசு மகன் மகாராஜா 34, ஆகிய இருவரும் சிவகங்கையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் முன் சரணடைந்தனர்.
கொலைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனவும் கூறினர். இருப்பினும் அவர்களை போலீசார் திருவேகம்புத்துாரில் வைத்து விசாரித்தனர். மேலும் இந்த வழக்கில் திருவேகம்புத்துார் போலீசார் சாமியார்பட்டியை சேர்ந்த தர்மராஜ் 41, என்பவரை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், கருப்பையாவை இளையராஜா, மகாராஜா விரட்டி சென்றதை விமலா பார்த்து உள்ளார். எனவே அவர்களை கைது செய்துள்ளோம். முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்துள்ளது, என்றனர்.