/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கலெக்டர் அலுவலகம் முன் பெண் தற்கொலை முயற்சி
/
கலெக்டர் அலுவலகம் முன் பெண் தற்கொலை முயற்சி
ADDED : பிப் 18, 2025 06:15 AM

சிவகங்கை : திருப்புத்துார் அருகேயுள்ள மாதவரம்பட்டியில் சொத்து பிரச்னையில் எஸ்.வி., மங்கலம் போலீசார் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சித்தார்.
மாதவரம்பட்டி விவசாயி அழகு. மனைவி இந்திராணி 48. கணவரை பிரிந்து திருப்பூரில் வசித்தார். சொத்தை பிரித்து தருமாறு அழகுவிடம் இந்திராணி கேட்டார். அழகு மறுத்துவிட்டார். தனது அண்ணன் சுப்பையா குடும்பத்திற்கு அழகு சொத்தை எழுதி கொடுத்ததாக கூறி, அவர்களிடம் இந்திராணி தகராறில் ஈடுபட்டார். இரு தரப்பு புகாரின்படி எஸ்.வி., மங்கலம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
சொத்துக்களை, மகள் பெயருக்கு எழுதி தர அழகு மறுப்பதாகவும் எஸ்.வி., மங்கலம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி இந்திராணி, நேற்று மதியம் 12:30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ.,க்கள் செல்வராஜ், அமுதா ஆகியோர் மீட்டு, கலெக்டர் ஆஷா அஜித்திடம் அழைத்து சென்றனர். மனுவை பெற்ற கலெக்டர், திருப்புத்துார் தாசில்தாரின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார். பின்னர் இந்திராணியை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீஸ் தரப்பில் கூறியதாவது, சொத்து பிரச்னை தொடர்பாக குடும்பத்தினர் இரு பிரிவாக தாக்கி கொண்டனர். சொத்து பிரச்னையை நீதிமன்றம் சென்று தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துவிட்டோம். அதற்குள் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சித்துள்ளார், என்றனர்.