/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தனித்தீவான பாலாஜி நகர் 20 ஆண்டாக போராட்டம்
/
தனித்தீவான பாலாஜி நகர் 20 ஆண்டாக போராட்டம்
ADDED : நவ 24, 2025 09:31 AM

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள பாலாஜி நகரில், சாலை வசதி வேண்டி 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர்.
காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள அரியக்குடிக்குட்பட்ட பாலாஜி நகரில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு சாலை வசதியின்றி மக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தவித்து வருகின்றனர்.
சாலை இல்லாததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அரியக்குடி கண்மாய் வழியாகவும், ரயில்வே தண்டவாளத்தை கடந்தும் செல்லும் அவலம் நிலவுகிறது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், ஆட்டோக்கள் கூட வர மறுக்கின்றன.
தற்போது பெய்து வரும் மழையால் சகதிக்காடாகவும், குளம் போலவும் காட்சியளிப்பதால் பாதையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் கூறுகையில்: தினமும் 50-க்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். அரியக்குடி ஊராட்சியாக இருந்த போது, பலமுறை சாலை அமைக்க மனு அளித்துள்ளோம். ஒரு கி.மீ., வரை சகதிச் சாலையில் தான் மாணவர்கள், வயதானவர்கள் என அனைவரும் செல்ல வேண்டியுள்ளது.
ஊராட்சியாக இருந்தபோது தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்து மூன்று மாதத்தில் சாலை அமைப்பதாக தெரிவித்தனர். இதுவரை சாலை அமைக்கவில்லை.
தற்போது மாநகராட்சியாக மாறி உள்ளது. புகார் அளித்துள்ளோம்.
சாலை அமைக்கும் திட்டம் செயல்முறையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

