/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வங்கி சேவை கருத்தரங்கு மகளிர் குழுவிற்கு கடன்
/
வங்கி சேவை கருத்தரங்கு மகளிர் குழுவிற்கு கடன்
ADDED : ஆக 06, 2025 09:05 AM
சிவகங்கை : சிவகங்கையில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில் வாடிக்கையாளர், மகளிர் குழுவினருக்கு வங்கியின் சேவைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
யூனியன் வங்கி மண்டல தலைவர் சபுமோன் தலைமை வகித்தார். உதவி பொதுமேலாளர் நாராயணன் ஷா முன்னிலை வகித்தார். நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் அனீஷ்குமார், தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்க நிர்வாகி ஸ்ரீரஞ்சனி, யூனியன் வங்கி ஊழியர் கணேசன் பங்கேற்றனர். கருத்தரங்கில் பங்கேற்ற 6 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.25 லட்சம் கடனுக்கான ஒப்புதல் கடிதம் வழங்கினர்.
சிவகங்கை முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார் பேசியதாவது:
பிரதமரின் (பி.எம்.எஸ்.பி.ஒய்) காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.20 மட்டுமே செலுத்தி, ரூ.2 லட்சம் வரை விபத்து இழப்பீடு பெறலாம். விபத்தில் உடல் உறுப்பு பாதித்தால் அதற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். பிரதமரின் மற்றொரு காப்பீடு (பி.எம்.ஜெ.ஜெ.பி.ஓய்) திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.436 செலுத்தினால் இயற்கை மரணம், விபத்து உட்பட அனைத்து மரணத்திற்கான காப்பீடு தொகையாக ரூ.2 லட்சம் வரை பெறலாம்.
மேலும் வங்கிகளில் கணக்கு துவக்கி, அதனை தொடர்ந்து பராமரிக்காமல் விட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கை மீண்டும் புதுப்பிக்க செப்., 30 வரை சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது, என்றார். மண்டல நிதி இணை அலுவலர் பிரின்சிகவேணி நன்றி கூறினார்.