அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை
அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை
ADDED : ஆக 13, 2026 12:47 AM

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி செஞ்சை 31வது வார்டில் ஓராண்டாக பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.
காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 31 வது வார்டில் உள்ள சிதம்பரனார் தெருவில் கழிவுநீர் கால்வாய் முற்றிலும் சேதமடைந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. அருகில் அங்கன்வாடி மையமும் இருப்பதால் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
இங்குள்ள செஞ்சை ஊருணி 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாக இருந்தது. ஊருணியின் முக்கிய நீர் ஆதாரமான வரத்து கால்வாய்கள் தடைபட்டு தண்ணீர் வரத்து நின்றது.15 ஆண்டுகளுக்கும் மேலாக ஊருணி தூர்வாரப்படவில்லை. சுற்று பகுதியில் உள்ள சாக்கடை கழிவு ஊருணிக்குள் விடப்படுகிறது. இதனால் செஞ்சை ஊருணி, கழிவுநீர் குளம் போல் காட்சியளிக்கிறது.
கவுன்சிலர் பூமி கூறுகையில்: சிதம்பரனார் தெருவில் சாக்கடை கால்வாய் முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. பலமுறை அதிகாரிகள் பார்வையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. குடிநீர் குளம் தற்போது சாக்கடை குளம் போல் காட்சியளிக்கிறது. குளத்தை துார்வாரி, மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் சீரமைத்து தரும்படி தொடர்ந்து வலியுறுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
