/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் வாகனங்களில் பேட்டரி, டீசல் திருட்டு
/
மானாமதுரையில் வாகனங்களில் பேட்டரி, டீசல் திருட்டு
ADDED : செப் 05, 2025 11:49 PM
மானாமதுரை: மானாமதுரையில் இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் உள்ள பேட்டரி மற்றும் டீசலை சிலர் திருடி வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
மானாமதுரையில் கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கனரக லாரிகள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள், சிறிய ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை நோட்டம் விடும் திருடர்கள் இரவு நேரங்களில் வாகனத்தில் உள்ள பேட்டரி மற்றும் டீசலை தொடர்ந்து திருடி வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோயில் எதிர்புறம் உள்ள ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்த பேட்டரிகளையும், அதே போன்று மானாமதுரை வைகை ஆற்றுக்குள் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்களில் இருந்த 2 பேட்டரிகள் மற்றும் டீசலையும், மானாமதுரை போலீஸ் ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்திலும் பேட்டரியை திருடி சென்றனர்.
இது குறித்து வாகன உரிமையாளர்கள் மானாமதுரை போலீசில் புகார் கொடுத்தும் இதுவரை திருடர்களை கைது செய்யாத நிலையில் நேற்று முன்தினம் மானாமதுரை மேலப்பசலை கிராமத்திற்கு அருகே கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு மண் அள்ளும் இயந்திரத்தில் இருந்த பேட்டரிகளையும், 100 லிட்டருக்கும் மேற்பட்ட டீசலையும் திருடி சென்றனர்.
வாகனங்களை மானாமதுரை பகுதியில் நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகின்றனர்.