ADDED : ஜூன் 12, 2025 02:08 AM
மானாமதுரை: மானாமதுரை பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளில் நள்ளிரவு நேரத்தில் டிப்டாப் ஆசாமி ஒருவர் பேட்டரிகளை திருடி வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நான்கு வழிச்சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிற்கும் லாரிகளில் அடிக்கடி பேட்டரிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் திருடு போய் வந்தன. இதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றதை தொடர்ந்து பேட்டரி திருட்டு இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகே உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் டிப்பர் லாரி ஒன்று பழுது நீக்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த போது நள்ளிரவில் ஒருவர் லாரியில் இருந்த பேட்டரிகளை திருடிசெல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மானாமதுரை, தெ.புதுக்கோட்டை ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் எதிரே நிறுத்தியிருந்த லாரியிலும் 2 பேட்டரிகள் திருடு போனது. மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.